நெல்லை: ஆட்சியாளர்கள் எதிர்த்தாலும் புதிய கல்விக் கொள்கை அடுத்த 10 ஆண்டுகளில் கொண்டு வரப்படும் என்று தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
அதேபோல், ஆங்கிலேயர் கொண்டு வந்த கல்வி குழந்தைகளை திறமைகளை அழிப்பதாகவும், மெக்காலே கொண்டு வந்த கல்விக் கொள்கையை ஒழித்து புதிய கல்விக் கொள்கையை பிரதமர் மோடி கொண்டு வந்துள்ளதாகவும் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
தேசிய கல்விக் கொள்கை என்பது கடந்த 1968ம் ஆண்டு முதன்முதலில் உருவாக்கப்பட்டது. அதன்பின் 1976ம் ஆண்டு கல்வி பொதுப் பட்டியலில் சேர்க்கப்பட்டது. பின்னர் கடந்த 1986ம் ஆண்டு கல்விக் கொள்கையில் திருத்தம் செய்யப்பட்டது. இதையடுத்து 1992ம் ஆண்டு கல்விக் கொள்கை திருத்தப்பட்டாலும், பெருமளவு மாற்றம் செய்யப்படவில்லை.
இந்த நிலையில் 2019ல் புதிய கல்விக் கொள்கையை கஸ்தூரி ரங்கன் தலைமையிலான குழு தாக்கல் செய்துள்ளது. இதை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்ட 2020ம் ஆண்டுக்கான புதிய கல்விக் கொள்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இதனையடுத்து பல்வேறு மாநிலங்களிலும் புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்த மத்திய அரசு ஆலோசித்து வருகிறது.
இருப்பினும் தமிழ்நாட்டில் புதிய கல்விக் கொள்கைக்கு எதிர்ப்பு எழுந்துள்ளது. இந்தப் நிலையில் திருநெல்வேலி அருகே தாழையூத்து பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கலந்துகொண்டார். இந்த நிகழ்ச்சியில் அண்ணாமலை பேசுகையில், இந்தியாவில் மிக வேகமாக மாறிக்கொண்டே இருக்கும் துறை கல்வி துறை. இதனை நாம் ஏற்றுக்கொள்ள பழக வேண்டும். குழந்தைகளுக்கு முதல் ஆசிரியராக இருக்க வேண்டியவர்கள் பெற்றோர்கள் தான். அவர்கள் நம்மிடம் இருக்கும் நேரம் அதிகம்.