குவைத் தீ விபத்தில் உயிரிழந்தவர் வீட்டிற்கு நேரில் சென்று ஆறுதல் சொன்ன அமைச்சர்.

திருச்சி மாவட்டம் நவல்பட்டை சேர்ந்த ராஜு என்பவர் உடல் கொச்சியிலிருந்து ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி கொண்டுவரப்பட்டது. திருச்சி மாவட்டம் நவல்பட்டு அண்ணா நகரில் உள்ள அவரது வீட்டில் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. இறுதி சடங்கு அங்கு உறவினர்கள் இறுதி மரியாதை செலுத்தினர். மேலும், திருச்சி மாவட்ட வருவாய் அலுவலர் ராஜலட்சுமி இறந்த ராஜுவின் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து தமிழ்நாடு அரசு சார்பில் அறிவிக்கப்பட்ட ரூ. 5 லட்சத்துக்கான நிதி உதவிக்கான காசோலையை ராஜுவின் குடும்பத்தினரிடம் வழங்கினார். அப்போது ராஜூவின் உறவினர்கள் வெளிநாட்டு வேலை போதும். ஊரோடு வந்து சொந்தபந்தங்களோடு வாழுங்கனு தலைதலையாக அடிச்சுக்கிட்டோமே.கேட்டீங்களா என்று கேட்டு கதறியது அங்கு வந்திருந்தவர்களை கண்கலங்க வைத்தது. அதனையடுத்து அவர்களின் குடும்ப வழக்கப்படி ராஜூவின் உடலுக்கு இறுதி சடங்குகள் செய்யப்பட்டு, இறுதியாக நவல்பட்டு பர்மா காலனியில் உள்ள இடுகாட்டில் அடக்கம் செய்யப்பட்டது. அடுத்த மாதம் ஊருக்கு வருவதாக இருந்த ராஜு தீ விபத்தில் சிக்கி உயிரற்ற உடலாக வந்தது அவரது குடும்பத்தினரை மட்டுமல்லாமல் நவல்பட்டு பகுதியையே பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்தத் தகவல் அறிந்த பள்ளி கல்வித்துறை அமைச்சரும் திருவரம்பூர் தொகுதி எம்எல்ஏவும் ஆன அன்பில் மகேஷ் பொய்யாமொழி தீ விபத்தில் மரணமடைந்த ராஜூவின் இல்லத்துக்கு நேரடியாக சென்று அவரது உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார் பின்னர் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் சொல்லி நிதி உதவி செய்தார் நிகழ்வில் திமுக ஒன்றிய செயலாளர் கங்காதரன் ஒன்றிய கவுன்சிலர் சண்முகம் மற்றும் திமுக நிர்வாகிகள் ஏராளமானோர் உடன் இருந்தனர்.