ஈரோடு வனப்பகுதியில் அவசரமாக தரையிறங்கிய வாழும் கலை நிறுவனர் ரவிசங்கர் பயணித்த ஹெலிகாப்டர்..!

ரோடு மாவட்டம் உகினியம் வனகிராமத்தில் பனிமூட்டம் காரணமாக வாழும் கலை நிறுவனர் ரவிசங்கர் பயணம் செய்த ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

ஈரோடு: வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ரவிசங்கர் மற்றும் அவரது இரு உதவியாளர்கள் பெங்களூருவில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் திருப்பூர் காங்கேயம் வழியாகத் திருவனந்தபுரம் சென்றுகொண்டிருந்தனர். சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் வழியாக சென்று கொண்டிருந்த போது கடுமையான பனிமூட்டம் காரணமாக ஹெலிகாப்டர் மேலும் இயக்கமுடியாத சூழலில், உகினியம் என்ற வன கிராமத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

இதன் காரணமாக அங்கு காத்திருந்த ரவிசங்கர், பின்னர் அங்கு கூடியிருந்த கிராம மக்களை சந்தித்தார். அங்கிருந்த மக்களுக்கு நன்றியும் தெரிவித்தார். பின்னர் மேகமூட்டம் விலகி வானம் தெளிவானதால் அரை மணி நேரம் கழித்து ஹெலிகாப்டர் மீண்டும் புறப்பட்டது.

கடந்த சில ஆண்டுகளாக கடம்பூர் மலைப்பகுதியில் பனிமூட்டம் காரணமாக அடிக்கடி ஹெலிகாப்டர் தரையிறங்கி பின்னர் பயணத்தை தொடர்வது வாடிக்கையாக இருந்து வருகிறது. என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.