A health worker takes a blood sample from a woman to perform a rapid HIV test during the "Comprehensive Day for the Promotion and Prevention of HIV / AIDS" in the framework of the International Day to Fight HIV-AIDS at the Morelos square in Caracas on December 3, 2021. (Photo by Yuri CORTEZ / AFP)

பிறந்த குழந்தையின் ஸ்டெம் செல்கள் மூலம் எச்ஐவி நோயால் குணமடைந்த முதல் பெண்.!!

நியூயார்க்: எச்ஐவி தொற்றிற்கு ஸ்டெம் செல் சிகிச்சை மூலம் நிரந்தர குணமளிக்க முடியும் என அண்மையில் விஞ்ஞானிகள் நிரூபித்தனர்.

ஏற்கெனவே இருவர் இந்த முறையில் குணமடைந்த நிலையில் மூன்றாவதாக அமெரிக்காவின் நியூயார்க் நகரைச் சேர்ந்த பெண் ஒருவர் முழுமையாக குணமடைந்துள்ளார். உலகிலேயே எச்ஐவி பாதிப்பிலிருந்து குணமடைந்த முதல் பெண் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் பெண்ணுக்கு தொப்புள் கொடி ரத்தத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஸ்டெம் செல்கள் மூலம் சிகிச்சையளிக்கப்பட்டுள்ளது. போன் மேரோ எனப்படும் எலும்பு மஞ்சை சிகிச்சை பெறுவோருக்கு செல்கள் ஒத்துப்போக வேண்டும் என்ற நிர்பந்தம் இருக்கும். ஆனால் தொப்புள் கொடி ரத்தத்தின் மூலம் பெறப்படும் ஸ்டெம் செல் சிகிச்சையில் இத்தகைய நிர்பந்தம் இல்லை.

எனவே இந்த முறை சிகிச்சையால் அமெரிக்காவில் மட்டும் ஆண்டுக்கு 50 பேர் பயனடைவார்கள் என்று எதிர்பார்ப்பதாக நியூயார்க் பெண்ணுக்கு சிகிச்சையளித்த மருத்துவ நிபுணர் குழுவில் இருந்த மருத்துவர் கோயென் வேன் பெஸியன் நியூயார்க் டைம்ஸ் இதழுக்கு அளித்தப் பேட்டியில் கூறியுள்ளார். மேலும், தொப்புள் கொடி ரத்த ஸ்டெம் செல்லை பயன்படுத்துவதில் பகுதியாக செல் ஒருமைப்பாடு இருந்தால் போதும் என்ற நிலையால் இதனை தானமாக பெறுவது எளிதாகும் என்று கூறியுள்ளார்.

குறிப்பிட்ட இந்தப் பெண்ணுக்கு 2013ல் எச்ஐவி தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. அதிலிருந்து 4 ஆண்டுகளுக்குப் பின்னர் அவருக்கு ரத்தப் புற்றுநோயும் கண்டறியப்பட்டது. அப்போது அவருக்கு ஹேப்ளோ கார்ட் ட்ரான்ஸ்ப்ளான்ட் (haplo-cord transplant) சிகிச்சை அளிக்கப்பட்டது. இது புற்றுநோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சையே. அவருடைய நெருங்கிய உறவினர் ஒருவர் அப்பெண்ணுக்கு தொப்புள் கொடி ரத்தம் தானம் செய்தார். பின்னர் அந்த நியூயார்க் பெண்ணுக்கு, அடல்ட் ஸ்டெம் செல்கள் செலுத்தப்பட்டன. இதன் மூலம் அப்பெண்ணின் நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்த மருத்துவர்கள் முயன்றனர். அவருக்கு 2017 ஆகஸ்டில் இந்தச் சிகிச்சை வழங்கப்பட்டது. இந்த சிகிச்சை முடிந்த மூன்றாண்டுகளுக்குப் பின்னர் மருத்துவர்கள் அவருக்கான எச்ஐவி சிகிச்சையையும் நிறுத்தினர். அவ்வாறு நிறுத்தி 14 மாதங்கள் ஆன நிலையிலும் அவரது உடலில் மீண்டும் எச்ஐவி வைரஸ் கிருமி கண்டறியப்படவில்லை என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

நியூயார்க்கில் நடந்த ரெட்ரோவைரஸ்கள் மற்றும் தொற்றுநோய்கள் தொடர்பான மாநாட்டில் (Conference on Retroviruses and Opportunistic Infections) மருத்துவர்கள் இதனைத் தெரிவித்தனர்.

எச்ஐவி தொற்றிலிருந்து குணமடைந்த பெண் நியூயார்க்கைச் சேர்ந்தவர் என்பதால் அவரது பெயர் அடையாளத்தைப் பகிராமல் நியூயார்க் பெண் என்று மட்டும் அழைக்கப்போவதாகவும் மருத்துவர்கள் கூறினர். அந்தப் பெண் அமெரிக்க கலப்பின பெண் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ச்சியாக மூன்று பேர் ஸ்டெம் செல் அதுவும் தொப்புள் கொடி ஸ்டெம் செல் சிகிச்சையில் இன்னொரு மைல்கல் என்று மருத்துவர்கள் கூறினார்.

இப்போது ஆய்வுக்காக தொப்புள் கொடி ரத்தம் கொடுத்தவர்கள் அனைவரும் காக்கேஸியன் இனத்தைச் சேர்ந்தவர்கள். இதேபோல் உலகம் முழுவதும் அனைத்து இனத்தவர் தொப்புள் கொடி ரத்த மாதிரிகளையும் பெற்று பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.