திருச்சி சஞ்சீவி நகரைச் சேர்ந்தவர் சுந்தரம் மற்றும் காமாட்சி தம்பதியின் மகன் குணா என்ற குணசேகரன், 34 வயதாகும் இவர் ஆட்டோ டிரைவராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி சுலோச்சனா (31). இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். குணசேகரனின் தந்தை சுந்தரம் இறந்துவிட்டார். குணசேகரனின் அம்மா காமாட்சி, அதே வீட்டில் தனது மகன் குடும்பத்தினருடன் வசித்து வந்தார். குணசேகரன் குடிப்பழக்கம் இருக்கிறதாம். இதுதவிர கஞ்சாவுக்கு அடிமையானதாக கூறப்படுகிறது. தினமும் குடித்துவிட்டு வந்து தனது மனைவி மற்றும் தாயிடம் தகராறில் ஈடுபட்டு வந்தாராம். வழக்கம் போல் கடந்த 19-ந் தேதி இரவு குடித்துவிட்டு வீட்டிற்கு வந்த குணசேகரன், சுலோச்சனா, காமாட்சி ஆகியோருடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். பின்னர் வீட்டிற்குள் சென்று படுத்து தூங்கியுள்ளார். நேற்றுமுன்தினம் காலை அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கோட்டை போலீசில், காமாட்சி புகார் அளித்தார். அதன்பேரில் அங்கு சென்ற போலீசார், குணசேகரனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து தற்கொலை என வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தினர். இதற்கிடையே குணசேகரனின் பிரேத பரிசோதனை அறிக்கை வெளிவந்தது. அந்த அறிக்கையில் அவர் கொலை செய்யப்பட்டது போலீசாருக்கு தெரியவந்தது. இதனால் போலீசார் தீவிரமாக விசாரித்தனர். சம்பவத்தன்று இரவு குடிபோதையில் வீட்டிற்கு வந்த குணசேகரன் தகராறில் ஈடுபட்ட பின்னர் தூங்க சென்றிருக்கிறார். இதையடுத்து காமாட்சியின் உறவினர்களான வடக்கு தாராநல்லூரை சேர்ந்த விக்கி என்ற லிதன்யா ஸ்ரீ (19), இ.பி.ரோடு நாகசுந்தரபுரத்தை சேர்ந்த குபேந்திரன் என்ற நிபுயா (19) மற்றும் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த விஜயகுமார் (48) ஆகிய 3 பேரும் குணசேகரனின் வீட்டுக்கு வந்தார்களாம். அதன்பின்னர் வீட்டிற்குள் சென்ற குபேந்திரன், தூங்கிக்கொண்டிருந்த குணசேகரனின் உடலில் காலியாக இருந்த ஊசி (சிரிஞ்ச்) மூலம் காற்றை செலுத்தியிருக்கிறார். அப்போது பக்கத்தில் இருந்த விஜயகுமாரும், விக்கியும் துப்பட்டாவால் குணசேகரனின் கழுத்தை நெரித்துள்ளனர். இதனிடையே வீட்டிற்குள் இருந்த காமாட்சியும், சுலோச்சனாவும் வீட்டிற்கு வெளியே வந்து யாரும் பார்க்கிறார்களா என்று காவல் காத்தார்களாம். பின்னர் அவர்கள் அனைவரும் இணைந்து குணசேகரனின் உடலை தூக்கில் தொங்கவிட்டு, அவர் தற்கொலை செய்து கொண்டதாக நாடக மாடியிருக்கிறார்கள். ஆனால் பிரேத பரிசோதனை அறிக்கையால் தற்கொலை அல்ல.. கொலை என்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து தற்கொலை வழக்கை கொலை வழக்காக மாற்றி பதிவு செய்த போலீசார், தாய் காமாட்சி, மனைவி சுலோச்சனா, விக்கி, குபேந்திரன், விஜயகுமார் ஆகிய 5 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தினர். இதில், குணசேகரன் குடித்துவிட்டு வந்து அடிக்கடி வீட்டில் தகராறில் ஈடுபட்டதாகவும், இதனால் வெறுத்து போன குடும்பத்தினர் அவரை கொலை செய்ததாகவும் போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்திருக்கிறார்கள். கைதான 5 பேரையும் திருச்சி கோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் கைதான விக்கி, குபேந்திரன் ஆகியோர் திருநங்கைகள் ஆவார். தற்கொலை என்பது நாடகம் ஆடி ஆட்டோ டிரைவர் குடும்பத்தினர் திருநங்கைகளுடன் சேர்ந்து கொலை செய்தது திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry1
Dead0
Wink0