திருச்சியில் பாராளுமன்றத் தேர்தலை மாவட்ட நிர்வாகம் நடத்த தயாராக உள்ளது.

மக்களவைத் தேர்தல் தொடர்பாக ஆட்சியரகத்தில் திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் செய்தியாளா்களிடம் சனிக்கிழமை மாலை கூறியதாவது திருச்சி மக்களவைத் தொகுதிக்கான தேர்தல் நடத்துவதற்காக அனைத்து நிலைகளிலும் மாவட்ட நிா்வாகம் தயாராக உள்ளது. மாா்ச் 27 வரை வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்யலாம். மாா்ச் 30 வேட்புமனுக்களைத் திரும்பப் பெற கடைசி நாளாகும்.
ஏப்.19 வாக்குப்பதிவு நடைபெறும். தேர்தல் பணிகளைக் கண்காணிக்கவும், முறைகேடுகளைத் தடுக்கவும் என மொத்தம் 56 தோதல் பணிக் குழுக்கள் தங்கள் பணிகளைத் தொடங்கியுள்ளன. பொதுமக்கள், தேர் தல் தொடா்பான தங்களது குறைகள், புகாா்களை கட்டுப்பாட்டு அறையை 1800 599 5669 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிலும் 63840 01585 என்ற கட்செவி அஞ்சல் எண்ணிலும் தெரிவிக்கலாம். சி-விஜில் எனும் செயலி மூலமும் புகாா் தெரிவிக்கலாம்.
அரசியல் கட்சிகள், சுயேச்சைகள் என அனைவரும் தேர்தல் தொடா்பான அனைத்து அனுமதிகளையும் சுவேதா எனும் இணையவழியில் விண்ணப்பித்து பெற்றுக் கொள்ள வேண்டும். உரிய அனுமதியின்றி எந்த செயல்பாடுகளிலும் ஈடுபடக் கூடாது. தேர்தல் காலத்தில் நடைபெறும் திருவிழா, ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் அரசியல் அடையாளம் இருக்கக் கூடாது. திருச்சி மக்களவைத் தொகுதியில் (திருவரங்கம், திருவெறும்பூா், திருச்சி மேற்கு, திருச்சி கிழக்கு, புதுக்கோட்டை, கந்தா்வக்கோட்டை ஆகிய 6 சட்டப் பேரவை தொகுதிகள்) 7,52,953 ஆண்கள், 7,91,548 பெண்கள், 241 திருநங்கைகள் என மொத்தம் 15 லட்சத்து 44 ஆயிரத்து 74 வாக்காளா்கள் வாக்களிக்கவுள்ளனா்.699 இடங்களில் 1,664 வாக்குச் சாவடிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. 147 வாக்குச் சாவடிகள் பதற்றமானவை எனக் கண்டறியப்பட்டுள்ளது. திருச்சி மாவட்டத்தில் 127 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை. லால்குடியில் ஒரு வாக்குச் சாவடி மிகவும் பதற்றமானது.
இங்கு கூடுதல் கண்காணிப்பு பலப்படுத்தப்படும். 85 வயதை கடந்தோா், வாக்குச்சாவடிக்கு வர முடியாத நிலையில் உள்ளோருக்கு வீடு தேடிச் சென்று வாக்குப்பதிவு பெற ஏற்பாடுகள் செய்யப்படும். தேர்தல் அமைதியாகவும், சிறப்பாகவும் நடைபெற அரசியல் கட்சியினா், வேட்பாளா்கள், பொதுமக்கள், வாக்காளா்கள், தேர்தல் பணியில் ஈடுபடும் அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். தேர்தல் விதிமுறைகளை மீறும் எவராக இருந்தாலும் பாரபட்சமின்றி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் ஆட்சியா். இதனைத் தொடா்ந்து, ரோந்து குழுக்களின் வாகனங்களையும் ஆட்சியரகத்திலிருந்து கொடியசைத்துத் தொடங்கி வைத்தாா். மேலும், அங்கீகரிக்கப்பட்ட மற்றும் பதிவு செய்யப்பட்ட அனைத்து அரசியல் கட்சிகளுடனும் ஆலோசனை நடத்தி, தோதல் நடத்தை விதிமுறைகள் குறித்து ஆட்சியா் விளக்கம் அளித்தாா். இந்த நிகழ்வுகளில், தேர்தல் பிரிவு அலுவலா்கள் மற்றும் போலீஸாா் உடனிருந்தனா்.