உலகின் குருவாக இந்தியா உருவாகும் நாள் வெகு தொலைவில் இல்லை-ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு..!

ராமநாதபுரம்: உலகின் குருவாக இந்தியா உருவாகும் காலம் வெகு தொலைவில் இல்லை என தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்தார்.

ஆளுநர் ஆர்.என்.ரவி 2 நாள் சுற்றுப்பயணமாக நேற்று முன்தினம் ராமநாதபுரம் வந்தார். முதல் நாள் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். இரண்டாவது நாளாக நேற்று காலை ராமநாதபுரம் அருகே எட்டிவயல் கிராமத்தில் உள்ள பாஜக மாவட்டத் தலைவரும் விவசாயியுமான தரணி முருகேசனின் இயற்கை வேளாண்மை பண்ணைக்குச் சென்றார்.

அங்கு சாகுபடி செய்திருந்த பயிர்கள், அறுவடை செய்த காய்கறிகள், நாட்டு மாட்டுப் பண்ணை ஆகியவற்றைப் பார்வையிட்டார். அப்போது ஆளுநர் பனைமட்டையில் பதநீர் குடித்தார். பின்னர் விவசாயிகளுடன் கலந்துரையாடினார்.

அப்போது ஆளுநர் பேசியதாவது: உலகில் இந்தியா வளர்ந்த நாடாக மாறிக் கொண்டிருக்கிறது. பிரான்ஸ், ஜெர்மனி, பெல்ஜியம் உள்ளிட்ட வளர்ந்த நாடுகள், தங்களது வளர்ச்சியை யுத்தத்துக்குப் பயன்படுத்தின. ஆனால், இந்தியா உலகுக்கு உதவும் நாடாக மாறிக் கொண்டிருக்கிறது.

உலக நாடுகளில் கரோனாவுக்கு இந்தியா கண்டுபிடித்த மருந்து உயர்வானது. அந்த மருந்தை, ஏழை நாடுகளுக்கு இலவசமாக வழங்கி தொண்டு செய்தோம். அதனால், உலகத்தின் குருவாக இந்தியா உருவாக வெகுகாலம் இல்லை. 2047-ல் உலகில் வளர்ந்த நாடாக இந்தியாவை மாற்ற பிரதமர் மோடி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

இயற்கை விவசாயத்தில் ஆர்கானிக் விவசாயம், இயற்கை விவசாயம் என இரு வகைகள் உண்டு. ஆர்கானிக் விவசாயம் உரம், பூச்சி மருந்தின்றி இயற்கை உரங்களைக் கொண்டு செய்வது. இயற்கை விவசாயம் என்பது சூழலுக்கு ஏற்ப அங்குள்ள பயிர்களை உருவாக்கி விவசாயம் செய்வது. இந்த விவசாய முறைகளை விவசாயிகள் கடைப்பிடிக்க வேண்டும். குறைந்த நீரில் உற்பத்தியாகும் சிறு தானியப் பயிர்களை அதிகம் உற்பத்தி செய்ய வேண்டும். சிறு தானியங்களில் அதிகச் சத்து உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

கலந்துரையாடலின்போது ஆளுநரிடம் வைகைப் பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் எம்எஸ்கே.பாக்கியநாதன், கடந்த 4 மாதங்களாக பயிர் காப்பீடு இழப்பீடும், நிவாரணமும் அரசு வழங்கவில்லை என மனு அளித்தார்.

அதைத் தொடர்ந்து திருஉத்தரகோசமங்கை கோயிலுக்குச் சென்ற ஆளுநரை ராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தான திவான் பழனிவேல் பாண்டியன் தலைமையில் அர்ச்சகர்கள் பூரண கும்ப மரியாதை அளித்து வரவேற்றனர். தொடர்ந்து சுவாமி, அம்மன் மற்றும் மரகத நடராஜரை ஆளுநர் தரிசனம் செய்தார்.

பின்னர் ராமநாதபுரம் அரசு விருந்தினர் மாளிகையில் ஆளுநரை இளம் தொழில் முனைவோர், மீனவர் சங்கப் பிரதிநிதிகள், பல்வேறு சமுதாயப் பிரதிநிதிகள் சந்தித்து கோரிக்கை மனுக்களை அளித்தனர்.