தமிழகத்தின் சட்ட ஒழுங்கு சீர்கேடுக்கு முதல்வர் தான் முக்கிய காரணம்… அர்ஜூன் சம்பத் பரபரப்பு குற்றச்சாட்டு..!

பொள்ளாச்சி குமரன் நகர் பகுதியில் உள்ள பாஜக தெற்கு மாவட்ட அமைப்பு சாரா பிரிவின் மாவட்ட செயலாளர் பொன்ராஜ் வீட்டுக்கு வந்த இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் மர்ம நபர்களால் சேதப்படுத்தப்பட்ட பொன்ராஜின் காரினை பார்வையிட்டார். அப்போது செய்தியாளார்களை சந்தித்தவர்,” தேசிய புலனாய்வு முகமை இந்தியா முழுவதும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்திய அமைப்பினரின் இடங்களில் நடத்திய சோதனையில், ஏராளமான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பை தடை செய்ய வேண்டும். முதல்வர்கள் மாநாட்டில் கேரளா முதல்வர் பினராய் விஜயன் தெரிவித்திருந்தார்.

அதுபோல தமிழகத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பை தடை செய்ய வேண்டும். தேசிய புலனாய்வு முகமை நடத்திய சோதனை என்பது முஸ்லிம்களுக்கு எதிரானது அல்ல. இந்த சோதனையின் எதிரொலியாக பாஜக, ஆர்எஸ்எஸ் மற்றும் இந்து அமைப்பு நிர்வாகிகளின் வீடுகள், கார்கள் மீது பெட்ரோல் குண்டு வீசி சேதப்படுத்தப்பட்டுள்ளது.

இதற்கு பாஜக மற்றும் இந்து அமைப்புகள் எதிர்வினை ஆற்றவில்லை. தமிழக போலீசாரின் திறமை மதிக்கத்தக்கது. ஆனால் மூன்று நாட்கள் ஆகியும் இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை. தற்போது இரண்டு பேர் மட்டுமே கைது செய்யப்பட்டுள்ளர்.

தமிழக அரசு எஸ்டிபிஐ மற்றும் பிஎஃப்ஐ ஆகியவற்றுடன் அரசியல் ரீதியாக ரகசிய உறவு வைத்துள்ளது. அதை துண்டித்துக் கொள்ள வேண்டும். வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக முதல்வர் அரசியல், ஜாதி, மதம் இதற்கு அப்பாற்பட்டு தமிழக காவல்துறையை சுதந்திரமாக செயல்பட அனுமதிக்க வேண்டும்.

தமிழகத்தின் சட்ட ஒழுங்கு கெட்டுப் போனதற்கு முக்கிய காரணம் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின்தான் என நான் குற்றம் சாட்டுகிறேன். இந்த வன்முறை சம்பவத்தை இதுவரை கண்டிக்கவில்லை. இதுதான் அரசியல் நாகரீகமா? இந்த வன்முறை சம்பவங்கள் குறித்து முதல்வர் வெள்ளை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். தமிழகத்தில் பாஜக மற்றும் இந்து அமைப்புகள் மீது நடத்தப்பட்ட பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்களுக்கு மத்திய உள்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்” இவ்வாறு அவர் தெரிவித்தார்.