ஈழத் தமிழர், மீனவர் பிரச்சனைக்கு தீர்வு காண மத்திய பாஜக அரசு மும்முரம்- ரணிலுடன் ரா தலைவர் ரகசிய ஆலோசனை..!

டெல்லி: இலங்கையில் ஈழத் தமிழர் பிரச்சனைக்கு தீர்வு காணும் நடவடிக்கையில் மத்திய பாஜக அரசு மும்முரமாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கை சென்ற வெளிநாட்டு கொள்கை வகுப்பு அமைப்பான ரா (RAW) தலைவர் சமந்த் கோயல், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கேவுடன் ரகசிய ஆலோசனை நடத்தியதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

2024-ம் ஆண்டு லோக்சபா தேர்தலுக்கு முன்னதாக தமிழகம் சார்ந்த நடவடிக்கைகளில் மத்தியில் ஆளும் பாஜக அரசு தீவிரம் காட்டி வருகிறது. அண்மையில் மத்திய அமைச்சர்கள் பட்டாளம் தமிழகத்துக்கு வருகை தந்து பல்வேறு ஆய்வுப் பணிகளை மேற்கொண்டது.

இன்னொரு பக்கம் இலங்கையை மையமாக வைத்து தமிழகத்தைச் சூழ்ந்திருக்கும் சிக்கல்களுக்கு தீர்வு காணும் நடவடிக்கைகளையும் மத்திய பாஜக் அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. தமிழக மீனவர்கள் பிரச்சனைக்கு காரணமான கச்சத்தீவை, இலங்கையிடம் இருந்து இந்தியா திரும்பப் பெறும் நடவடிக்கைகளை ஏற்கனவே தொடங்கியது. ஆனாலும் இலங்கை தொடர்ந்து தமிழக மீனவர்களைத் தாக்கி வருகிறது.

இந்தியாவின் இந்த தலையீட்டைத் தொடர்ந்து சீனா, பாகிஸ்தான் நாடுகள், ஈழத் தமிழரை தங்கள் பக்கம் வளைத்துப் போட பகீரத பிரயத்தனம் செய்கின்றன. இருநாட்டு மீனவர் பிரச்சனை, கச்சத்தீவு மீட்பு விவகாரங்களில் சில தமிழ் மீனவர்கள் இந்தியாவுக்கு எதிராக கருத்து தெரிவிப்பதன் பின்னணியில் சீனா, பாகிஸ்தான் இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஏனெனில் இலங்கையின் மீன்வளத்துறை அமைச்சரான டக்ளஸ் தேவானந்தாதான், சீனா, பாகிஸ்தான் தூதர்களை இலங்கையின் வடக்கு பகுதியில் தமிழர் பிரதிநிதிகளை சந்திக்க வைப்பதில் தீவிரம் காட்டுகிறவர்.

மீனவர்கள் பிரச்சனைக்கு அப்பால், ஈழத் தமிழர் பிரச்சனைக்கான தீர்வு குறித்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கேவின் நடவடிக்கைகள் தீவிரம் அடைந்துள்ளன. ஈழத் தமிழர் பிரச்சனை தொடர்பாக அனைத்து கட்சிக் கூட்டத்தை ரணில் விக்கிரமசிங்கே கூட்டுகிறார். இது தொடர்பாக தமிழ்த் தலைவர்கள் தீவிரமாக ஆலோசனையும் நடத்தி வருகின்றனர்.

இப்படி மீனவர்கள், ஈழத் தமிழர்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதில் மத்திய பாஜக அரசு தீவிரம் காட்டுகிறது என்பதை உறுதிப்படுத்தும் வகையில் இலங்கை ஊடகங்களில் ஒரு செய்தி வெளியாகி உள்ளது. மத்திய அரசின் வெளியுறவு கொள்கை வகுப்பு அமைப்பான RAW- ராவின் தலைவர் சமந்த் கோயல் இலங்கைக்கு சென்றதாகவும் கொழும்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கே சந்தித்து தனியே ரகசிய ஆலோசனை நடத்தியதாகவும் இலங்கை ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டுள்ளன.

இருப்பினும் இந்தியாவின் இந்த தலையீட்டை இலங்கை ராணுவத்தினர் விரும்பவில்லை என்பதையும் வெளிப்படுத்தும் சம்பவங்கள் நிகழ்ந்து வருகின்றன. இலங்கையின் வடக்கு பகுதியில் பாகிஸ்தான் தூதர் இன்று முகாமிட்டுள்ளார். அதேநேரத்தில் கச்சத்தீவு அருகே மீன்பிடித்த தமிழ்நாட்டு மீனவர்களை இலங்கை கடற்படை விரட்டியடித்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.