திருச்சி மக்களின் மன அழுத்தத்தை போக்கும் காவிரி ஆற்று பாலம்.

திருச்சி என்றாலே நம் நினைவுக்கு வருவது ஸ்ரீரங்கமும் மலைக்கோட்டையும் தான் ஆனால் அதையும்தாண்டி முக்கியமான ஒரு அடையாளமாக திகழ்வது ஸ்ரீரங்கத்தையும், திருச்சியையும் இணைக்க கூடிய காவிரி பாலம்தான். அதில் அப்படி என்ன சிறப்பு இருக்கிறது வாங்க பார்ப்போம்.
அகண்ட விரிந்து பாய்ந்தோடும் காவிரி ஆற்றின் நடுவே இந்த பாலம் கட்டப்பட்டுள்ளது. திருச்சி வாழும் மக்களின் மகிழ்ச்சியான தருணமாக இருந்தாலும் அல்லது வேறு எந்த சூழ்நிலையாக இருந்தாலும் சிறிது நேரம் காவிரி ஆற்றின் பாலத்தில் அமர்ந்து அந்த இயற்கையின் சத்தத்தை கேட்டால் மனது அவ்வளவு லேசாக மாறிவிடும் என்று திருச்சி மக்கள் கூறுகிறார்கள். அப்படி என்ன சிறப்பு என்று நானும், ஒருநாள் மாலை நேரத்தில் சென்றேன்.
அப்போது சிறிது நேரம் மெய் மறந்து காவிரி ஆற்றில் வழிந்தோடும் நீரின் சத்தமும், சில்லென்று வீசும் காற்றும் மனதை இறுக்கிப்போட்டு விட்டது. அப்போது தான் தெரிந்தது இந்த இடத்திற்கு ஏன் மக்கள் அதிக அளவு குடும்பங்களுடன் வந்து செல்கிறார்கள் என்று… இருந்தாலும் எதற்காக திருச்சி மக்கள் அனைவரும் மாலை நேரத்தில் காவிரி பாலத்திற்கு வருகிறார்கள் என்று மக்களிடம் கேட்போம் என்று நினைத்தேன். சிறிது தூரம் நடந்து சென்றேன், அப்போது ஒருவர் காவிரியின் ஆற்றுப் பாலத்தில் நின்று கொண்டு இயற்கையை ரசித்தபடி ஏதோ முணுமுணுத்துக் கொண்டே இருந்தார், அவரிடம் சென்று நான் கேட்டபோது அவர் கூறியது
நான் பிறந்து, வளர்ந்தது எல்லாம் திருச்சி மலைக்கோட்டையின் அருகே உள்ள பகுதியில்தான். அங்கேயே இருக்கக்கூடிய அரசு பள்ளியில் பயின்று, பிறகு கல்லூரியில் படித்து முடித்து, வேலையும் திருச்சியிலேயே கிடைத்தது. இதைவிட வேறு ஒரு மகிழ்ச்சியே இல்லை என்று நினைத்தேன். எனக்கு நினைவு தெரிந்த நாள் முதல் என் தந்தையும், தாயும் தினமும் என்னை பொடி நடையாக நடந்து காவிரி பாலத்திற்கு அழைத்து வருவார்கள். அப்போதெல்லாம் இந்த காவிரி ஆற்றை பார்க்கும்போது ஏதோ ஒரு புது விதமான ஒரு உணர்வு என்னை அறியாமலே என மனதிற்குள் தோன்றும்.
அதிலும் குறிப்பாக மாலை நேரத்தில் சூரியன் மறைவதை பார்க்கும்போது அவ்வளவு அழகாக இருக்கும். பின்பு அங்கு சுட சுட விற்பனை செய்யும் வேர்க்கடலை, பஜ்ஜி, சோளம், என சாப்பிட்டுவிட்டு , நீர் ஓடுவதை ரசித்து விட்டு மீண்டும் வீட்டிற்கு சென்று விடுவோம். அந்த பழக்கம் நாளடைவில் என்னை பின்தொடர்ந்து கொண்டே இருந்தது.
பள்ளி பருவத்தில் எனது நண்பர்களுடன் அடிக்கடி இங்கு வருவேன். அதேபோல் கல்லூரியில் படிக்கும்போது பல முறை நண்பர்களுடன் வந்து நீண்ட நேரம் பேசிக்கொண்டு, புகைப்படங்கள் எடுத்துக்கொண்டு செம்ம ஜாலியாக இருப்பேன். காலங்கள் ஓடியது வேலை, வேலை என ஓட வேண்டிய சூழ்நிலையாக மாறிவிட்டது. ஒவ்வொரு முறையும் இந்த பாலத்தை கடந்து செல்லும்போது பழைய நினைவுகள் ஞாபகம் வரும். ஆனால் இன்று ஆபிஸில் வேலையின் காரணமாக மிகுந்த மன அழுத்தம் ஏற்பட்டது, இதனால் அனைவரிடமும் நான் கோபத்தையே காண்பித்தேன். என்ன செய்வது என்று தெரியாமல் நின்றபோதுதான் என் நினைவுக்கு வந்தது காவிரி பாலம். உடனே இங்கு வந்துவிட்டேன்.
காவிரி பாலத்தில் நின்று கொண்டு என் மனதில் இருக்கக்கூடிய கஷ்டத்தை அனைத்தையும் காவிரி தாயிடம் கத்தி சொல்லும்போது மனது அவ்வளவு லேசாக மாறிவிட்டது. அது ஏன் என்று எனக்கு தெரியவில்லை. சந்தோஷம், கஷ்டம் எதுவாக இருந்தாலும் இந்த காவிரி பாலம்தான். எந்த சூழ்நிலையில் வந்து நம்முடைய சந்தோஷத்தையும், கஷ்டத்தையும் காவிரித் தாயிடம் பகிர்ந்து கொண்டால், மனது அவ்வளவு நிம்மதியாக இருக்கும். எனக்கு மட்டும் அல்ல திருச்சி மக்களின் தாய் காவிரி ஆறுதான். என்னைப்போல பலர் இங்கு வந்து சிறிது நேரம் புலம்புவார்கள், பின்பு மகிழ்ச்சியாக செல்வார்கள் என்றார்.
இவரை தொடர்ந்து அருகில் இருந்த ஒருவரை கேட்டபோது, இந்த அகண்ட விரிந்த காவிரி ஆற்றில் ஓடக்கூடிய நீரில் இருந்து வீசக்கூடிய குளிர்ந்த காற்று, இடது புறம் மலைக்கோட்டை கோவில், வலது புறம் ஸ்ரீரங்கம் ரங்கநாதரின் பெருமாளின் கோபுரம், என பார்த்துக்கொண்டே தினமும் மாலை நேரம் இந்த காவிரி பாலத்தில் நடைபயணம் மேற்கொண்டு இளையராஜாவின் பாட்டும், காவிரியின் இயற்கை சத்தமும் கேட்டால் மனதிற்கு அப்படி ஒரு சந்தோஷமான உணர்வுகள் தங்களை அறியாமலேயே தோன்றும்.
அதுதான் காவிரி தாயின் சிறப்பு. திருச்சி மக்களாக இருந்தாலும் சரி, வேற எந்த ஊராக இருந்தாலும் சரி திருச்சிக்கு வந்தாலே காவிரி ஆற்றையும், பாலத்தையும் பார்க்காமல் எவரும் சென்றது இல்லை. திருச்சி காவிரி ஆற்றிக்கும் மக்களுக்கும் உள்ள உறவு என்பது, தாயிக்கும், குழந்தைக்கும் உள்ள உறவு போன்று யாராலும் பிரிக்க முடியாது என்றார்.