பிளக்ஸ் பேனரில் கிராமத்தின் வரவு செலவு கணக்கு பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தொழிலாளர் தினமான மே-1 ஆம் தேதி கிராம சபை கூட்டம் நடைபெறவுள்ள நிலையில், பிளக்ஸ் பேனரில் கிராமத்தின் வரவு செலவு கணக்கு பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், கடந்த 2021-22 ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட அனைத்து திட்டங்களுக்கான செலவு அறிக்கை, மேலும் அனைத்து திட்டங்களின் கீழ் பயனடைந்த வரவு பயனாளிகளின் விவரம் மற்றும் பணிகளின் முன்னேற்ற விவரங்கள் அடங்கிய முழு அறிக்கை கிராம சபை நடப்பதற்கு முன்னதாக 29.04.2022 மற்றும் 30.04.2022 ஆகிய நாட்களில் ஒவ்வொரு கிராம ஊராட்சியில் உள்ள ஊராட்சி மன்ற அலுவலக தகவல் பலகையில் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்படுவது உறுதி செய்ய வேண்டும்.
இந்த தகவலினை ப்ளக்ஸ் பேனேர்கள் மூலமும் பொதுமக்கள் பார்த்து அறியும் வண்ணம் பொருத்திட வேண்டும். மேலும், 2022-23-ம் ஆண்டிற்கு தேர்வு செய்யப்பட்ட பணிகளின் விவரம் மற்றும் பயனாளிகள் விவரம் அனைத்தும் கிராமசபையில் பொதுமக்கள் முன்னிலையில் படித்துக் காண்பித்து ஒப்புதல் பெறுவது உறுதி செய்யப்பட வேண்டும்.
மேலும் கிராம ஊராட்சியில் 2021-22 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட அனைத்து வரவு செலவு விவரங்கள் அடங்கிய சுருக்கத்தினை கிராம சபையில் பங்கேற்கும் பொது மக்கள் ஒவ்வொருவருக்கும் வழங்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது