பேங்காக்: தாய்லாந்தில் குழந்தைகள் காப்பகத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் குழந்தைகள், பெண்கள் உட்பட 34 பேர் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
தாய்லாந்தில் ஏராளமான பகல் நேர குழந்தைகள் நல காப்பகங்கள் செயல்பட்டு வருகின்றன. பணி நிமித்தமாக வீட்டை விட்டு வெளியில் செல்லும் பெற்றோர்கள் இந்த பகல் நேர குழந்தைகள் நல காப்பகத்தில் குழந்தைகளை விட்டுச் செல்வது வழக்கம்.
அதேபோல் தாய்லாந்தின் வடக்கு மாகாணத்தில் ஒரு பகல் நேர குழந்தைகள் நல காப்பகம் செயல்பட்டு வருகிறது. அதில் ஏராளமான குழந்தைகளும், பெற்றோர்களும், காப்பக ஊழியர்களும் இருந்தனர்.
அப்போது காப்பகத்திற்குள் புகுந்த மர்ம நபர் ஒருவர் தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் கண்மூடித்தனமாக சுடத் தொடங்கினார். இதனை கண்ட குழந்தைகளும், பெற்றோர்களும் அலறியடித்துக் கொண்டு அங்கும் இங்குமாக ஓடினர்.
இந்த கோரத் தாக்குதலில் குழந்தைகள், பெரியவர்கள் உட்பட 30 பேர் உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில் பலி எண்ணிக்கை 34 ஆக அதிகரித்து இருக்கிறது. இதில் 22 பேர் குழந்தைகள் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் கடைசியில் தன்னை தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்தார். தகவலறிந்து விரைந்து வந்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார். துப்பாக்கிச்சூடு நடத்திவர் குறித்து விசாரித்தபோது அவர் முன்னாள் போலீஸ் அதிகாரி என்பது தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக தாய்லாந்து பிரதமர் தீவிர விசாரணை நடத்த உத்தரவிட்டு இருக்கிறார். தாய்லாந்து நாட்டில் மற்ற நாடுகளை ஒப்பிடுகையில் துப்பாக்கியின் விலை பன்மடங்கு அதிகம். இருப்பினும் இங்கு இதுபோன்ற துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் தொடர்கின்றன.
கடந்த 2020 ஆம் ஆண்டு இதேபோல் ராணுவ வீரர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 29 பேர் கொல்லப்பட்டனர். 57 பேர் படுகாயமடைந்தனர். இந்த நிலையில் தற்போது முன்னாள் போலீஸ் அதிகாரி நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 34 பேர் கொல்லப்பட்டது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.