ஏசு கிறிஸ்து மனிதர்களை பாவங்களில் இருந்து மீட்பதற்காக பாடுகள் பட்டு, சிலுவையில் அறையுண்டு மரித்தார்.
இதை நினைவு கூறும் விதமாக உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் 40 நாட்கள் நோன்பிருந்து, வறியவர்களுக்கு உதவிகள் செய்வது வழக்கம். இந்த நாட்களை அவர்கள் ஆண்டுதோறும் தவக்காலமாக கடைபிடித்து வருகிறார்கள்.
இன்று முதல் (புதன்கிழமை ) 40 நாட்களுக்கான கிறிஸ்தவர்களின் தவக்காலம் தொடங்குகிறது. இதனையொட்டி இந்த நாளை ‘சாம்பல் புதன்’ என கிறிஸ்துவர்கள் அனுசரிக்கின்றனர். இதனையொட்டி சென்னை, வேளாங்கண்ணி என அனைத்து தேவாலயங்களிலும் சிறப்பு வழிபாடுகள் மற்றும் பக்தர்களுக்கு சாம்பல் பூசும் நிகழ்வுகள் நடைபெறுகிறது. தவக்காலம் இன்று தொடங்கி, 40 நாள்களுக்கும் கிறிஸ்துவர்கள் நோன்பு கடைபிடிப்பார்கள். இந்த தவக்காலத்தின்போது, ஒவ்வொரு நாளும் காலை அல்லது மாலை வேளைகளில் நடைபெறும் வழிபாடுகளில் கிறிஸ்தவர்கள் பங்கேற்க வேண்டும்.
மதுப்பழக்கம், புகைப்பிடித்தல் உள்ளிட்ட தீயப் பழக்கங்களில் இருந்து தங்களை விடுவித்துக்கொள்ள இந்த தவக்காலம் உதவியாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த தவக்காலத்தின் இறுதி வாரம் வரும் ஏப்ரல் மாதம் முதல் துவங்கும் நிலையில், அப்போது சிலுவைப் பாதை எனப்படும் சிறப்பு வழிபாடுகள் செய்யப்படும். இந்நிலையில் இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்படுவதற்கு முந்தைய நாளான ஏப்ரல் 6ம் தேதி புனித வியாழன் அனுசரிக்கப்படுவதுடன், ஏப்ரல் 7 அன்று இயேசு சிலுவையில் அறையும் நாளான புனித வெள்ளியும், அன்றிலிருந்து 3வது நாளில் வரும் இயேசு உயிர்த்தெழும் ஈஸ்டர் பண்டிகை ஏப்.9ம் தேதியும் கொண்டாடப்பட உள்ளது.