தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத் தொடர் 2ம் நாள் கூட்டம் தொடங்கியது – மறைந்த உறுப்பினர்களுக்கு இரங்கல்..!

சென்னை: தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத் தொடரின் 2ம் நாள் கூட்டம் சபாநாயகர் அப்பாவு தலைமையில் தொடங்கியது.

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தில், மறைந்த உறுப்பினர்களுக்கு இரங்கல் தீர்மானங்களை சபாநாயகர் அப்பாவு வாசித்தார். அதன்படி, திரைப்பட வசன கர்த்தா ஆரூர்தாஸ், தமிழறிஞர் அவ்வை நடராசன் மறைவுக்கு பேரவையில் இரங்கல் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் அ.சின்னசாமி, தில்லை காந்தி, துரை கோவிந்தராசன், ந.சோமசுந்தரம் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. தமிழறிஞர் க.நெடுஞ்செழியன், பிரபல ஓவியர், எழுத்தாளர் மனோகர் தேவதாஸ் மறைவுக்கு இரங்கல் தீர்மானம் கொண்டுவரப்பட்டது.

இதேபோல் சிறுபான்மையினர் ஆணையத் துணைத் தலைவர் மஸ்தான் மறைவுக்கு பேரவையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் திருமகன் ஈவெரா மறைவுக்கும், கால்பந்து ஜாம்பவான் பீலே மறைவுக்கும் தமிழ்நாடு சட்டப்பேரவையில் இரங்கல் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இரங்கல் தீர்மானத்தை தொடர்ந்து உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நின்று 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர். மறைந்த உறுப்பினர்களுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, நாள் முழுவதும் சட்டப்பேரவை ஒத்திவைக்கப்பட்டது. 2023ம் ஆண்டின் முதல் சட்டமன்ற கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது என்பது நினைவுகூரத்தக்கது