2023-24 கல்வி ஆண்டு துவங்க உள்ள நிலையில் கோவை மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் பள்ளி வாகனங்கள் சோதனை செய்யப்பட்டன.
வருகின்ற 7ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் அனைத்து மாவட்டங்களிலும் பள்ளி வாகனங்கள் சோதனைக்குட்படுத்தப்பட்டு வருகின்றன. இச்சோதனைகளில் வாகனங்களின் தரம் முன்னெச்சரிக்கை பாதுகாப்பு வசதிகள் ஓட்டுனர்களுக்கு கண் பரிசோதனை உடல் பரிசோதனை ஆகியவை மேற்கொள்ளப்படுகிறது.
அதன் தொடர்ச்சியாக கோவை மாவட்டத்தில் பிஆர்எஸ் மைதானத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்திகுமார் பாடி தலைமையில் பள்ளி வாகனங்கள் சோதனை செய்யப்பட்டன. இதில் 200க்கும் மேற்பட்ட பள்ளிகளின் 1355 பள்ளி வாகனங்கள் சோதனை செய்யப்பட்டது. வாகனங்களின் தரம், முதலுதவி பெட்டிகள் உள்ளதா, அவசர கால வழி உள்ளதா, சிசிடிவி கேமராக்கள் உள்ளிட்ட பல்வேறு சோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. மேலும் ஓட்டுநர்களுக்கு கண்பரிசோதனை உடல் பரிசோதனையும் தனியார் மருத்துவமனையின் சார்பில் மேற்கொள்ளப்பட்டன. இந்நிகழ்வில் தீயணைப்புத் துறையின் சார்பில் ஓட்டுநர்களுக்கு தீ தடுப்பு பயிற்சிகள் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கீதா, ஆர்.டி.ஒ க்கள் கலந்து கொண்டனர்.