கோவை சரவணம்பட்டி அருகே உள்ள சிவானந்தாபுரத்தை சேர்ந்தவர் அரவிந்த் (வயது 27). இவர் வெளிநாட்டு பணம் மாற்றும் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார்.
சம்பவத்தன்று இவர் வடகோவையில் உள்ள டாஸ்மாக் பாருக்கு மது குடிக்க சென்றார். அங்கு இருந்த சப்ளையரிடம் ரூ. 500 பணத்தை கொடுத்து மது வாங்கி வரும்படி கூறினார். அதனை பெற்றுக்கொண்ட சப்ளையர் டாஸ்மாக் கடைக்கு சென்று பணத்தை கொடுத்து மது கேட்டார். அப்போது டாஸ்மாக் ஊழியர் பணத்தை வாங்கி பரிசோதித்த போது அது ரூ. 500 கள்ள நோட்டு என்பது தெரிய வந்தது. இது குறித்து அவர் டாஸ்மாக் காசாளருக்கு தகவல் தெரிவித்தார். அவர் ஆர்.எஸ்.புரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக போலீசார் டாஸ்மாக் கடைக்கு விரைந்து சென்று ரூ. 500 கள்ள நோட்டை மாற்ற முயன்ற அரவிந்தை மடக்கி பிடித்தனர்.
பின்னர் அவரை போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் தான் பணியாற்றும் நிறுவனத்தில் கொடுத்தது தான். மற்றபடி இதனை பற்றி தனக்கு எதும் தெரியாது என கூறிவிட்டார். தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் ஏற்கனவே அரவிந்த் இந்த டாஸ்மாக் பாரில் 2 முறை கள்ள நோட்டை கொடுத்து மது குடித்து விட்டு சென்றது தெரிய வந்தது.
எனவே போலீசார் அவரை கைது செய்தனர். பின்னர் அவரை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.