வனப்பகுதிகளில் வளர்ந்துள்ள அன்னிய மரங்களை அகற்றி, தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக திகழ வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
சென்னை: தமிழ்நாடு வனப்பகுதிகளை ஆக்கிரமித்துள்ள அன்னிய மரங்களை அகற்றுவது தொடர்பான வழக்கு, நீதிபதிகள் பாரதிதாசன் மற்றும் சதீஷ்குமார் அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது காணொலி காட்சி மூலம் ஆஜராகியிருந்த தமிழ்நாடு வனத்துறை செயலாளர் சுப்ரியா சாஹு, அன்னிய மரங்களை அகற்றுவது தொடர்பான வரைவு கொள்கை இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளதாகவும், மத்திய பிரதேசம், தெலங்கானா, கர்நாடகா, கேரளா, குஜராத், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் தமிழ்நாடு வனத்துறையினர் இதுசம்பந்தமாக ஆய்வு செய்ய உள்ளதாகவும் குறிப்பிட்டார்.
மேலும், யூகாலிப்டஸ் போன்ற அன்னிய மரங்களை அகற்றுவதற்காக, நபார்டு வங்கி ஆறு கோடி ரூபாயை ஒதுக்கியுள்ளதாகவும், மத்திய அரசிடம் ஏழு கோடி ரூபாய் நிதி ஒதுக்க கோரியுள்ளதாகவும் தெரிவித்தார். இதையடுத்து, நபார்டு வங்கி ஒதுக்கியுள்ள நிதியை பயன்படுத்தி, அன்னிய மரங்களை அகற்றி, தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக திகழ வேண்டும் எனத் தெரிவித்த நீதிபதிகள், விசாரணையை மார்ச் 18ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.