தொழில் புரிய எளிதான மாநிலங்கள் பட்டியலில் 14-ம் இடத்திலிருந்து 3-வது இடத்துக்கு முன்னேறிய தமிழ்நாடு – முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்..!!

சென்னை: தொழில் புரிய எளிதான மாநிலங்கள் பட்டியலில் தமிழ்நாடு 14-ம் இடத்தில் இருந்து 3-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது என்று புத்தொழில் நிறுவனங்கள் மற்றும் தொழில் காப்பகங்கள் கண்காட்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

முன்னதாக புத்தொழில் தொடங்க தகுதியான 31 பேருக்கு தலா ரூ.5 லட்சம் ஆதார நிதியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

அதனையடுத்து பேசிய அவர், தமிழ்நாட்டில் அனைத்து துறைகளும் முன்னோக்கிய பாய்ச்சலில் போய்க் கொண்டிருக்கிறது. இந்தியாவில் தமிழ்நாட்டில் தான் அதிக எண்ணிக்கையிலான புத்தொழில் காப்பகங்கள் இயங்கி வருகின்றன. மேலும் தமிழ்நாட்டில் இயங்கும் அனைத்து புத்தொழில் காப்பகங்களையும் உலகத் தரத்துக்கு உயர்த்துவதே அரசின் நோக்கம் என அவர் தெரிவித்தார்.

புத்தாக்க மையத்தில் முதலீடு செய்ய ரூ.50 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு விண்ணப்பங்களை பெற்று பரிசீலனை நடக்கிறது. தொழில் முனைவோர் தயாரிப்புகளை சந்தைப்படுத்த ஸ்டார்ட் அப் தமிழ்நாடு அமைப்பு உருவாக்கம். மேலும் புத்தொழில் நிறுவனங்கள் தங்கள் பொருள்களை சந்தைப்படுத்துவதில் ஏற்படும் சிக்கல்களை தீர்க்க புதிய அமைப்பு உதவும் எனவும் முதல்வர் கூறியுள்ளார்.

எல்லார்க்கும் எல்லாம் கிடைக்கக்கூடிய வகையில் உன்னத நோக்கோடு திராவிட மாடல் ஆட்சி சிறப்பாக நடைபெற்று வருகிறது. அனைத்து மாவட்டத்தின் வளர்ச்சி அனைவருக்குமான வளர்ச்சியாக வடிவமைத்து அதன்படி திட்டங்களை தீட்டி வருகிறோம். மேலும் சிறு, குறு, நடுத்தர தொழில்கள் மிகப்பெரிய முன்னேற்றத்தை கண்டு வருகின்றது.

சென்னை நந்தனத்தில் புத்தொழில் மையம் 3 மாதத்தில் செயல்பட தொடங்கும். தொழில்நுட்ப மாநாடு, புத்தாக்க மாநாடு என இந்த ஆண்டு இறுதியில் 2 மிகப்பெரிய மாநாடுகள் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு இதுவரை 6 தொழில் முதலீட்டாளர் மாநாடுகள் நடத்தப்பட்டுள்ளது. 6 மாநாடுகள் மூலம் ரூ.2.2 லட்சம் கோடி முதலீடுகளை தமிழ்நாடு ஈர்த்துள்ளது. தெற்காசியாவிலேய தொழில் முதலீட்டில் தமிழ்நாடு முதலிடம் பெற வேண்டும் என்பதே எனது ஆசை. புத்தொழில் நிறுவனங்களுக்கு தேவையான மனித வளத்தை நான் முதல்வன் திட்டம் உதவும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.