தமிழ்நாடு அரசு பூரண மதுவிலக்கு அமல்படுத்த வேண்டும் தஞ்சாவூரில் மாவட்ட சிறப்பு பேரவை கூட்டம் …

குழந்தைகள்- பெண்கள் குடும்ப நலன் கருதி தமிழ்நாடு அரசு  பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும்!  இந்திய மாதர் தேசிய சம்மேளன சிறப்பு பேரவை கூட்டத்தில் வலியுறுத்தல். குழந்தைகள் மற்றும் பெண்கள்  நலன் கருதி தமிழ்நாடு அரசு பூரண மதுவிலக்கு அமல்படுத்த வேண்டும் என  தமிழ்நாடு அரசை வலியுறுத்தி இந்திய மாதர் தேசிய சம்மேனம் சார்பில்  தஞ்சாவூரில் மாவட்ட சிறப்பு பேரவை கூட்டம் நடைபெற்றது.  கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் எஸ் .தனசீலி தலைமை வகித்தார். மாநிலத் தலைவர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பி‌.பத்மாவதி, மாநில நிர்வாகி எம்.கண்ணகி ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தெற்கு மாவட்ட செயலாளர் முத்து உத்திராபதி பேரவையை வாழ்த்தி பேசினார். கூட்டத்தில் புதிய மாவட்ட தலைவராக கண்ணகி, மாவட்ட செயலாளர் விஜயலட்சுமி, பொருளாளர் இந்துமதி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் வேலை நாட்களை 250 நாட்களாக உயர்த்த வேண்டும், நாள் ஒன்றுக்கு ரூபாய் 600 ஊதியம் உயர்த்தி வழங்க வேண்டும், மூன்று மாதமாக வழங்கப்படாமல் உள்ள சம்பளத்தை உடனடியாக வழங்க வேண்டும், ஒரத்தநாடு- பட்டுக்கோட்டை மார்க்கத்தில் முன்பு இயக்கியது போல் நகர பேருந்துகள் இயக்கப்பட வேண்டும், பூதலூர் ஒன்றியம் கரியபட்டி கிராமத்தில் மாவட்ட ஆட்சியர் உறுதி அளித்தவாறு புதிய சாலை அமைத்து தர வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் ஒருமானதாக நிறைவேற்றப்பட்டன.