தமிழக சட்டப்பேரவையின் நடப்பாண்டிற்கான கூட்டத்தொடர் ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் இன்று தொடங்கியது.
சட்டப்பேரவை கூட்டத்தொடரின் தொடக்கத்தில் தமிழ்த் தாய் வாழ்த்து இசைக்கப்பட்டது. ஆளுநர் உரையின் தொடக்கத்தின் போது திமுக கூட்டணி கட்சியினர் ஆளுநர் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து முழங்கமிட்டதுடன், ஆளுநர் உரையை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர். காங்கிரஸ், மதிமுக, விசிக, சிபிஎம், சிபிஐ உள்ளிட்ட கட்சிகள் வெளிநடப்பு செய்தன.
இந்நிலையில் சட்டப்பேரவையில் கடும் அமளிக்கு மத்தியில் தமிழில் உரையை தொடங்கினார் ஆளுநர் ஆர்.என்.ரவி. ஆளுநர் ஆர்.என். ரவி ஆற்றிய உரை பின்வருமாறு :-
பல்வேறு துறைகளில் நாட்டுக்கே முன்னோடி மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது; கடந்த 50 ஆண்டுகாலத்தில் தமிழ்நாடு குறிப்பிடத்தக்க வளர்ச்சியை அடைந்துள்ளது
உயர்கல்வியில் சேரும் மாணவிகளுக்கு மாதம் ரூ1000 வழங்கும் திட்டத்தால்,சேர்க்கை அதிகரிக்கும். தமிழ்நாடு அரசு செயல்படுத்தும் காலை உணவு திட்டத்தில் 1.14 லட்சம் மாணவர்கள் பயன். இது நாட்டிற்கே முன் உதாரணமாக திகழும்.
நீட் தேர்வு, ஏழை மற்றும் கிராம புற மாணவர்களுக்கு பின்னடைவாக இருக்கும் என்று இந்த அரசு கருதுகிறது. நீட் சட்டம் குடியரசு தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டு நிலுவையில் உள்ளது.
மேகதாது அணை கட்டக் கூடாது என்பதிலும், நீட் தேர்வு தேவையில்லை என்பதிலும் தமிழ்நாடு அரசு உறுதியாக உள்ளது. முதலமைச்சர் கோப்பை’ விளையாட்டு போட்டி தமிழ்நாடு முழுவதும் நடத்தப்படும்.
பள்ளி, கல்லூரி மாணவர்கள், அரசு ஊழியர்கள், மாற்றுத் திறனாளிகள் பங்கேற்கும் வகையில் போட்டிகள் நடத்தப்படும். கபடி, கால்பந்து, சிலம்பம் போட்டிகளும் உண்டு.
பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைவதன் மூலம் அந்த பகுதி மக்களின் வாழ்கை மேம்பாடு அடையும், தமிழ்நாட்டின் பொருளாதாரம் மேம்படும்.