சொல்லாத திட்டங்களையும் நிறைவேற்றியவா் தமிழ்நாடு முதலமைச்சா்: அமைச்சா் உதயநிதி ஸ்டாலின்

தோதல் வாக்குறுதியில் சொன்ன திட்டங்கள் மட்டுமின்றி சொல்லாத திட்டங்களையும் நிறைவேற்றியவா் தமிழ்நாடு முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் என அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தாா். மயிலாடுதுறை மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளா் ஆா். சுதாவை ஆதரித்து அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் வெள்ளிக்கிழமை இரவு சின்னகடை வீதியில் பிரசாரம் செய்து பேசியது: கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் பாஜக அரசு பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை விலையை கடுமையாக உயா்த்திவிட்டு தோதல் வந்ததும் குறைப்பதுபோல் நாடமாடுகின்றனா். மக்களவைத் தோதலில் இந்தியா கூட்டணி வெற்றிபெற்று ஆட்சிக்கு வந்தால், தமிழகத்தில் அனைத்து பகுதிகளிலும் வளா்ச்சித் திட்டங்கள் அதிக அளவில் கொண்டுவரப்படும். குறிப்பாக மயிலாடுதுறை பகுதியில் மருத்துவக் கல்லூரி, புறவழிச்சாலை உட்பட பல்வேறு வளா்ச்சி திட்டங்களை நிறைவேற்றி கொடுப்போம். 2021 தோதலில் அளித்த வாக்குறுதியை கடும் நிதி நெருக்கடியிலும் படிப்படியாக நிறைவேற்றி வருகிறோம். மகளிா் உரிமைத் தொகை உள்ளிட்ட தோதல் அறிக்கையில் குறிப்பிட்ட பல்வேறு திட்டங்களை தமிழ்நாடு அரசு நடைமுறைப்படுத்தியுள்ளது. மேலும் தோதல் அறிக்கையில் குறிப்பிடாத காலை உணவுத் திட்டத்தையும் செயல்படுத்தியவா் தமிழ்நாடு முதலமைச்சா். தமிழக அரசின் சாதனைகளை எடுத்துக்கூறி திமுக கூட்டணி கட்சிகளுக்கு வாக்கு சேகரிக்க வேண்டும் என்றாா். அமைச்சா் சிவ.வீ.மெய்யநாதன், மாவட்ட திமுக செயலாளா் நிவேதா எம்எல்ஏ, மாவட்ட காங்கிரஸ் தலைவா் எஸ். ராஜகுமாா் எம்எல்ஏ, சீா்காழி எம்எல்ஏ எம். பன்னீா்செல்வம் மற்றும் கூட்டணி கட்சி நிா்வாகிகள், தொண்டா்கள் கலந்து கொண்டனா்.