கர்நாடகாவில் மழை பற்றாக்குறையால் அணைகள் வற்றி வருகின்றன. குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விட முடியாது,” என, காங்கிரசைச் சேர்ந்த கர்நாடக துணை முதல்வர் சிவகுமார் தெரிவித்தார்.
இதுபற்றி புதுடில்லியில் நேற்று அவர் கூறியதாவது: கர்நாடகாவில், பருவ மழை சரியாக பெய்யவில்லை.கே.ஆர்.எஸ்., அணை உட்பட அனைத்து அணைகளிலும், நீர்மட்டம் மிகவும் குறைவாக உள்ளது. பெங்களூரு உள்ளிட்ட பல நகரங்களில் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது.இத்தகைய சூழ்நிலையில், தமிழகத்துக்கு காவிரி தண்ணீரை திறந்து விட முடியாது. காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டாலும், தண்ணீரை திறந்து விடுவது கஷ்டம். மத்திய ஜல்சக்தி துறை, அனைத்து மாநிலங்களின், நீர்ப்பாசனத் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த திட்டமிட்டுள்ளது.ஜூலை 8 அல்லது 9ல் கூட்டம் நடக்கலாம்.
முதலில் பெங்களூரில் கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது. ஆனால் கே.ஆர்.எஸ்., அணையில் நீர்மட்டம் குறைவாக உள்ளதை அதிகாரிகள் பார்க்கட்டும் என்பதால், கே.ஆர்.எஸ்.,சில் கூட்டம் நடத்தும்படி, நான் கூறியுள்ளேன். மேகதாது திட்டம் பற்றி, சட்ட வல்லுனர்களுடன் ஆலோசனை நடத்திய பின் பதிலளிக்கிறேன். திட்டம் தாமதமானால், செலவு அதிகரித்து, மாநில அரசுக்கு பொருளாதார சுமை ஏற்படும்.
இதற்கு முன், 9,000 கோடி ரூபாயாக இருந்த திட்ட மதிப்பு, தற்போது 13,000 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.மேகதாது திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழகம் உச்ச நீதிமன்றத்தை நாடியுள்ளது. காவிரியில் இருந்து, 700 டி.எம்.சி., தண்ணீர் கடலுக்கு வீணாக செல்கிறது. இதில் நாங்கள் பயன்படுத்துவது, 40 டி.எம்.சி., தண்ணீர் மட்டுமே. மேகதாது திட்டத்தால், தமிழகத்துக்கு எந்த வித நஷ்டமும் இல்லை. இதை புரிய வைக்க முயற்சிக்கிறோம். இந்த விஷயத்தில், அரசியலை செய்யாமல் முடிவு எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.