இந்து அமைப்பு தலைவர் மீது மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு.. பெலகாவியில் தொடரும் மதமோதல்..!

பெங்களூர்: கர்நாடகா மாநிலம் பெலகாவியில் ஓர் இந்து அமைப்பின் தலைவர் மீது மர்ம நபர் துப்பாக்கிச் சூடு நடத்திய பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த அவர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த தகவலை அறிந்த பல்வேறு இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் பெலகாவியின் குவிந்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதனால் அசம்பாவிதத்தை தவிர்க்க அங்குள்ள நூற்றுக்கணக்கான போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும், துப்பாக்கிச் சூடு நடத்திய நபரை கைது செய்ய 10-க்கும் மேற்பட்ட தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

பொதுவாக, இந்தியாவில் மத ரீதியாலான மோதல்களும், கலவரங்களும் வட மாநிலங்களில்தான் அதிகம் நடைபெறும். ஆனால், சமீபகாலமாக அந்த வரலாற்றை மாற்றி எழுதி வருகிறது கர்நாடகா. தென் மாநிலங்ளில் மதம் சார்ந்த வெறுப்பு பேச்சுகளும், மோதல்களும் அதிகம் நிகழும் மாநிலமாக கர்நாடகா மாறி வருவது அனைவரையும் அதிர்ச்சியடைச் செய்துள்ளது. அதிலும் குறிப்பாக, கர்நாடகாவின் ஷிவமொக்கா, மங்களூர், பெலகாவி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில மாதங்களாக இதுபோன்ற சம்பவங்களை அதிகம் பார்க்க முடிகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு கூட, ஷிவமொக்காவில் ஆர்எஸ்எஸ் நிர்வாகிகளும், முஸ்லிம் அமைப்பைச் சேர்ந்தவர்களும் அடுத்தடுத்து கொலை செய்யப்பட்டது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. தற்போது மீண்டும் அப்படியொரு பயங்கர சம்பவம் நடைபெற்றுள்ளது.

கர்நாடகா மாநிலம் பெலகாவி மாவட்டம் ஹிண்டலகா கிராமத்தைச் சேர்ந்தவர் ரவி கோகிடகேரா (39). இவர் ஸ்ரீராம் சேனா அமைப்பின் பெலகாவி மாவட்ட தலைவராக பொறுப்பு வகித்து வருகிறார். சில முஸ்லிம் அமைப்புகளுக்கு எதிரான போராட்டங்களில் தொடர்ந்து இவர் பங்கேற்று வந்துள்ளார். இந்நிலையில், நேற்று ஹிண்டல்கா பகுதியில் உள்ள தனது சகோதரியின் வீட்டில் இருந்து பெலகாவிக்கு அவர் திரும்பிக் கொண்டிருந்தார். காரை அவரது டிரைவர் ரமேஷ் ஓட்டிச் சென்றார்.

அப்போது பெலகாவி அருகே வந்த போது, ஒரு ஸ்பீடு பிரேக்கரில் அவரது கார் ஏறி இறங்கியுள்ளது. ஸ்பீடு பிரேக்கரை கார் மெதுவாக கடந்த போது, அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு நபர், கார் ஜன்னலில் துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதில், துப்பாக்கி குண்டு ரவி கோகிடகேராவின் முகத்தில் பாய்ந்தது. இன்னொரு குண்டு டிரைவர் ரமேஷின் கையில் பாய்ந்தது. இதனால் கட்டுப்பாட்டை மீறிய கார், அங்குள்ள மரத்தில் வேகமாக மோதி நின்றது. இந்த தாக்குதலில் படுகாயமடைந்த ரவியையும், டிரைவர் ரமேஷையும் அங்கிருந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். முகத்தில் குண்டு பாய்ந்து அதிக ரத்தம் வெளியேறியதால் தீவிர சிகிச்சை பிரிவில் ரவி அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் குறித்த தகவல் வெளியானதும், ஸ்ரீராம் சேனா, அனுமன் சேனா உள்ளிட்ட பல்வேறு இந்து அமைப்பைச் சேர்ந்தவர்களும், பாஜகவினரும் பெலகாவியில் குவிந்துள்ளனர். இதனால் அங்கு பெரும் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. அசம்பாவிதங்களை தவிர்க்க நூற்றுக்கணக்கான போலீஸார் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர். துப்பாக்கிச் சூடு நடத்திய நபரை பிடிக்க 10 தனிப்படைகளை காவல்துறை அமைத்துள்ளது.