சபாஷ்!! உச்சநீதிமன்றத்தில் அரசியல் சாசன அமர்வு விசாரணை: வரும் 27ந்தேதி முதல் நேரடி ஒளிபரப்பு..!!

டெல்லி: உச்சநீதிமன்றத்தில் அரசியல் சாசன அமர்வு விசாரணைகளை இணையதளத்தில் நேரடி ஒளிபரப்பு செய்ய தலைமை நீதிபதி யுயு லலித் அனுமதி வழங்கி உள்ளார்.

அதன்படி வரும் 27ந்தேதி முதல் யூடியூப் வாயிலாக நேரலை செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நீதிமன்றங்களில் வழக்குகள் எவ்வாறு விசாரணை செய்யப்படுகிறது என்பது குறித்து, மனுதாரர்கள், வாதிகள், பிரதிவாதிகள், வழக்கறிஞர்கள் தவிர பொது மக்களுக்கு தெரியாதநிலையே தொடர்ந்து வருகிறது. இடையிடையே சில வழக்குகளின் விசாரணைகள் மட்டும் உயர்நீதிமன்றங்களில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டுள்ளது. ஆனால், இதுவரை உச்ச நீதிமன்ற வழக்கு விசாரணை நேரடி ஒளிரபப்பு செய்யப்படவில்லை.

இந்த நிலையில், முதன் முறையாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி, நீதிபதி என்.வி ரமணா இன்று ஓய்வு பெறும் அன்று நடத்தப்பட்ட வழக்கு விசாரணை நேரலை யாக ஒளிபரப்பானது. 72 ஆண்டுகால உச்சநீதிமன்ற வரலாற்றில் முதன்முறையாக வழக்கு விசாரணை ஆன்லைன் மூலம் இன்று நேரலை செய்யப்பட்டது. இது முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாக கருதப்படுகிறது. இது நீதித்துறையின் வெளிப்படைத்தன்மையை மக்கள் அறிந்து கொள்ள உதவும் என நம்பப்படுகிறது.

இந்த நிலையில், தற்போதைய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி, யு.யு.லலிதா, உச்சநீதிமன்ற அரசியல்சாசன அமர்வு முன் நடைபெறும் வழக்குகளின் விசாரணையை நேரலை செய்ய அனுமதி வழங்கி உள்ளார். அதன்படி வரும் 27ந்தேதி முதல், அரசியல் சாசன அமர்வு விசாரணைகள் மட்டும் யுடியூபில் நேரடியாக ஒளிபரப்பாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.