கோடை விழாவில் இரண்டாம் நாளாக நேற்று இரவு நேரத்தில் ஏற்காட்டின் அழகை சுற்றுலா பயணிகள் கண்டு களிக்கும் வகையில் எங்குப் பார்த்தாலும் மின்விளக்குகளால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. ஏற்காட்டின் மையப் பகுதியில் உள்ள ஏரியில் மின்விளக்குகள் அலங்காரம் ஜொலித்தது. இதேப் போல அண்ணா பூங்கா வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள பூக்களால் உருவங்கள் மின்னொளியில் ஜொலித்தது. எங்குப் பார்த்தாலும் வண்ண வண்ண விளக்குகள் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது சுற்றுலாப் பயணிகளுக்கு கூடுதல் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
ஏற்காட்டில் இயற்கை அழகை மின்னொளியில் ஏராளமான சுற்றுலா பயணிகள் கண்டுகளித்தனர். ஏற்காட்டில் நேற்று மிதமான சாரல் மழையும் காற்றும் வீசியது. சுற்றுலா பயணிகளின் மனதிற்கு இதமான சூழ்நிலையை ஏற்படுத்தியது. ஏற்காட்டில் முழு அழகையும் நேற்று கண்டு களிக்கும் வகையிலும் அங்கு நிலவும் சீதோஷ்ண நிலையை அனுபவிக்கும் வகையிலும் ஏற்காடு இருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் பயணிகள் வசதிக்காக ஆங்காங்கே குடிநீர் வசதி கழிப்பிட வசதிகளையும் மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.