திருப்பூர் துணிக்கடைகளில் திடீர் தீ விபத்து – ரூ.8 கோடி மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசம்.!

திருப்பூர் மாவட்டம் காதர்பேட்டை பகுதியில் அமைந்துள்ள பனியன் பஜார் பகுதியில் தற்காலிக ஷெட்டுகளில் 50க்கும் மேற்பட்ட துணி கடைகள் இயங்கி வருகின்றன.

நேற்று இரவு 9 மணி அளவில் ஒரு கடையில் ஏற்பட்ட தீ விபத்து மளமளவென அனைத்து கடைகளில் பரவியது.

இந்த விபத்து தொடர்பாக உடனே தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறையினர் நீண்ட நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இருப்பினும் சுமார் 50-க்கும் மேற்பட்ட கடைகள் தீயில் கருகி நாசமாகியது. இந்த விபத்தால் சுமார் 8 கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானதாக முதல் கட்டமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடைகள் அனைத்தும் மூடப்பட்டிருந்ததால் உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை. இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் மின்கசிவு காரணமாக ஒரு கடையில் தீ விபத்து ஏற்பட்டு மற்ற கடைகளுக்கு மளமளவென பரவியது தெரிய வந்துள்ளது.