சென்னையில் திடீர் நிலநடுக்கம்: அலுவலகத்தில் இருந்து வெளியே ஓடி வந்த ஊழியர்கள்-பரபரப்பு..!

சென்னையில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் அலுவலகத்தில் இருந்து ஊழியர்கள் வெளியேறியதால் பரபரப்பு ஏற்பட்டது.

துருக்கி, சிரியாவில் அண்மையில் ஏற்பட்ட நிலநடுக்கத்தை யாராலும் மறக்க முடியாது. அந்த அளவுக்கு உயிரிழப்பு ஏற்பட்டு இருக்கிறது. தொடர்ந்து இந்தியா, ஆப்கானிஸ்தான், நேபாளம், பாகிஸ்தான் உட்பட பல்வேறு நாடுகளில் நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களாக இந்தியாவில் இமாச்சல பிரதேசம், உத்தராகண்ட், அருணாச்சல பிரதேசம், காஷ்மீர் உள்ளிட்ட மாநிலங்களில் லேசான நிலநடுக்கம் உணரப்பட்டது.

இதனிடையே உத்தராகண்டில் எந்த நேரத்தில் மிகப்பெரிய நிலநடுக்கம் ஏற்படலாம் என்று தேசிய புவி இயற்பியல் ஆய்வுக் கழகத்தின் தலைமை விஞ்ஞானி பூர்ண சந்திரராவ் கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இதனிடையே, சென்னையில் இன்று காலை 10.15 மணிக்கு திடீரென நிலநடுக்கம் உணரப்பட்டது. சென்னை ராயப்பேட்டையில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டதாக கூறப்படுகிறது. அங்குள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்த ஊழியர்கள் அடுக்குமாடி கட்டிடத்தில் இருந்து வெளியே ஓடிவந்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவுகிறது. தொடர்ந்து நிலநடுக்கம் ஏற்படுமா என்ற அச்சத்தில் மக்கள் இருக்கின்றனர். ஆனால் இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் எத்தனை புள்ளிகள் பதிவானது என்ற விவரம் உடனடியாக தெரியவில்லை.

அதே நேரத்தில் அருகில் உள்ள தனியார் நிறுவனத்தில் `போர்’ போடும் பணி நடைபெற்று வருவதாகவும் இதனால் அருகில் இருந்த கட்டிடங்கள் குலுங்கியதாகவும் இதை நிலநடுக்கம் என நினைத்து அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் வெளியே ஓடி வந்ததாகவும் கூறப்படுகிறது.