கோவையில் கடந்த இரண்டு நாட்களில் நடந்த இரண்டு கொலைகளையொட்டி மாநகரில் உள்ள 540 ரவுடிகள் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவையில் கடந்த 12-ம் தேதி பந்தயசாலை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நவஇந்தியா சாலை அருகே கோவை கருப்பக்கல் தோட்டம் பகுதியைச் சேர்ந்த சத்தியபாண்டி (27) என்பவரை, இரண்டு இரு சக்கர வாகனங்களில் வந்த 5 நபர்கள் துரத்திச் சென்று வெட்டிக் கொலை செய்தனர்.
அதேபோல கடந்த 13-ம் தேதி ஜாமீனில் வெளிவந்த கொண்டையம்பாளையம் லட்சுமி கார்டனில் வசித்து வரும் கோகுல் (25) என்பவரை கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தின் பின்புறம் வைத்து அடையாளம் தெரியாத ஐந்து நபர்கள் வெட்டிக் கொலை செய்தனர். இச்சம்பவங்கள் தொடர்பாக, கோவை பந்தய சாலை காவல் நிலையத்தில் இரு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதுகுறித்து கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் கூறுகையில், “முதற்கட்ட விசாரணையில் இரண்டு வழக்குகளிலும் தனிப்பட்ட பகையின் காரணமாக சம்பவங்கள் நடந்துள்ளதாகத் தெரிய வருகிறது. இரண்டு வழக்குகளும் ஒன்றுக்கொன்று தொடர்பற்றவை. இரண்டு வழக்குகளிலும் சம்பவ இடம் மற்றும் அதன் அருகில் உள்ள இடங்களில் இருந்த சிசிடிவி பதிவுகளை பார்வையிட்டு அவற்றில் ஈடுபட்டவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளார்கள்.
கோவை மாநகரில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் சரித்திர பதிவேடுகள் உள்ள 540 ரவுடிகளின் பட்டியல் தயார் செய்யப்பட்டு அவர்களின் நடவடிக்கைகள் சம்மந்தப்பட்ட காவல் நிலையத்தால் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. ரவுடிகளுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கடந்த 40 நாட்களில் மட்டுமே இதுவரையில் 10 நபர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழும், 75 பேர்கள் மீது பிரிவு 109 படியும் மற்றும் 105 பேர்கள் மீது பிரிவு 110 படியும் நன்னடத்தை சட்ட பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நன்னடத்தை சட்டத்தின் கீழ் பிணைக் காலத்தில் இருந்தபோது குற்றச் சம்பவங்களில் ஈடுபட்ட காரணத்தால் நன்னடத்தைப் பிணை விதிகளை மீறியதற்காக 13 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த இரண்டு நாட்களில் நடைபெற்ற இருவேறு சம்பவங்களையொட்டி கோவை மாநகரில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் ரவுடிகளுக்கு எதிரான சிறப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு தற்போது சிறைச்சாலையில் உள்ள ரவுடிகள், ஆஜரில் இருந்த ரவுடிகள் மற்றும் ஆஜரில் இல்லாத ரவுடிகள் குறித்து விசாரிக்கப்பட்டது.
மேலும் சந்தேகத்திற்கிடமான 8 ரவுடிகள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சந்தேக நபர்களின் நடமாட்டத்தை கண்காணிக்கும் வகையில் வாகன தணிக்கையில் காவல்துறையினர் ஈடுபட்டு வருகிறார்கள். மேலும் இரவு ரோந்துப் பணி பலப்படுத்தப்பட்டு அனைத்து அதிகாரிகளும், காவலர்களும் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளார்கள். எனவே பொதுமக்கள் பதற்றமடையும் வகையிலான அல்லது அச்சுறுத்தும் வகையிலான சூழ்நிலைகள் ஏதுமின்றி நகரில் இயல்பு வாழ்க்கை பராமரிக்கப்பட்டு வருகிறது” என்று கூறினார்.