நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெறவுள்ளது. அரசியல் கட்சிகள் சார்பில் கூட்டணி, தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகள் இறுதி செய்யப்பட்டு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிர சுற்றுப்பயணம் செய்து பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், நாடு முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து பிரதமர் மோடி பிரசாரம் செய்தி வருகிறார். அதன்படி, உத்தரகண்ட் மாநிலம் ருத்ராபூரில் பிரசாரம் மேற்கொண்ட பிரதமர் மோடி, “பெண்களுக்கு அதிகாரம் அளிக்கும் வகையில் நமோ ட்ரோன் திதி என்ற திட்டத்தை தொடங்கியுள்ளோம். இந்த திட்டத்தின் கீழ் நமது சகோதரிகள் மற்றும் மகள்களுக்கு ஆளில்லா விமானம் பைலட் ஆக உதவும் வகையில் லட்சக்கணக்கான ரூபாய் மதிப்பிலான ட்ரோன்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இது உத்தரகாண்டில் உள்ள எங்கள் மகள்கள் மற்றும் சகோதரிகளுக்கும் பயனளிக்கும்.” என்றார். காங்கிரசுக்கு ஜனநாயகத்தில் நம்பிக்கை இல்லை என்ற பிரதமர் மோடி, காங்கிரஸ் இந்தியாவை அராஜகத்துக்குள் தள்ள விரும்புகிறது. கர்நாடகாவில் காங்கிரஸ் தலைவர் ஒருவர் நாட்டை இரண்டாகப் பிரிப்பதாகப் பேசினார். நாட்டைப் பிரிக்கப் பேசுபவர்கள் தண்டிக்கப்பட வேண்டாமா? அவரைத் தண்டிப்பதற்குப் பதிலாக, அவருக்கு தேர்தலில் காங்கிரஸ் கட்சி வாய்ப்பளித்துள்ளது என்று குற்றம் சாட்டினார். தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, “எங்கள் மூன்றாவது பதவிக்காலம் தொடங்க இன்னும் சில மாதங்கள் மட்டுமே உள்ளன, இந்த மூன்றாவது பதவிக்காலத்தில் ஊழலுக்கு எதிராக இன்னும் பெரிய நடவடிக்கை இருக்கும். ஊழல் செய்தவர்கள் சிறைக்கு செல்ல வேண்டாமா?” என கேள்வி எழுப்பினார். ஊழல்வாதிகள் என்னை மிரட்டுவதோடு, அவதூறும் செய்வதாக குற்றம் சாட்டிய பிரதமர் மோடி, கேளிக்கைகளில் ஈடுபடுவதற்காக மோடி பிறக்கவில்லை, மக்களுக்காக பணியாற்றவே பிறந்துள்ளேன் என தெரிவித்தார். “பாஜக மூன்றாவது முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டால் இந்தியா தீப்பற்றி எரியும் என்று ராகுல் காந்தி பேசுகிறார். இது ஜனநாயக மொழியா?” என பிரதமர் மோடி கேள்வி எழுப்பியுள்ளார். முன்னதாக, அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று முன் தினம் டெல்லி ராம்லீலா மைதானத்தில் நடைபெற்ற எதிர்க்கட்சிகளின் பேரணியில், பிரதமர் மோடி மேட்ச் ஃபிக்சிங் செய்து விட்டதாகவும், தேர்தலுக்கு முன்பே இரண்டு முதல்வர்களை பாஜக சிறைக்கு அனுப்பியதாகவும் ராகுல் காந்தி குற்றம் சாட்டியிருந்தார். இந்த மேட்ச் ஃபிக்சிங் தேர்தலில் பாஜக மீண்டும் வெற்றி பெற்றால், இந்தியா தீப்பற்றி எரியும்; அரசியலைமைப்பு சட்டத்தையே மாற்றி விடுவார்கள் என ராகுல் காந்தி காட்டம் தெரிவித்திருந்தார். ஜனநாயகத்தில் காங்கிரஸையும் அதன் எமர்ஜென்சி மனநிலையையும் யாரும் நம்புவதில்லை. அதனால் இப்போது மக்களைத் தூண்டிவிடுகிறார்கள். காங்கிரஸ் இந்தியாவை ஸ்திரமற்ற நிலைக்கு கொண்டு செல்ல விரும்புகிறது எனவும் பிரதமர் மோடி குற்றம் சாட்டினார். முன்னதாக, உத்தரகாண்ட் மாநிலத்தில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட பிரதமர் மோடி, ருத்ராபூரில் திடீரென வாகனப் பேரணி சென்றார். சாலையின் இரு புறமும் கூடியிருந்த பாஜகவினர், பொதுமக்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0