மதுரை மாநகராட்சியில் 400 கோடி ரூபாய்க்கும் மேல் வரி வசூலிக்கப்படாமல் இருப்பது தெரியவந்துள்ளது. வரி வசூல் விவகாரத்தில், முறைகேட்டில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சென்னையை தவிர்த்து மற்ற மாநகராட்சிகளில், 2010ம் ஆண்டு முதல் 2022 வரை, வசூல் செய்யப்பட்ட வரித்தொகை மற்றும் நிலுவையில் உள்ள தொகை விவரங்களை அறிய சமூக ஆர்வலர் காசி மாயன் என்பவர் ஆர்டிஐ எனப்படும் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் விண்ணப்பித்தார். இதில், மதுரை மாநகராட்சி தொடர்பான சில விவரங்கள் கிடைக்கப் பெற்றுள்ளன.
அதில், நடப்பு 2021-22-ம் நிதியாண்டில் மட்டும் மதுரை மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரித்தொகை 456 கோடியே 88 லட்சமாக உள்ளது. இதில், 17 கோடியே 67 லட்ச ரூபாய் மட்டும் வசூல் செய்யப்பட்டிருக்கும் சூழலில், 439 கோடியே 21 லட்ச ரூபாய் வசூலிக்கப்படாமல் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதிகபட்சமாக சொத்து வரியாக மட்டும் 237 கோடியே 92 லட்சம் ரூபாய் வசூலிக்க வேண்டியுள்ளது.
அதேசமயம், 2021-22 நிதியாண்டில் மதுரை மாநகராட்சி வசூலிக்க வேண்டிய தொகை, 209 கோடி ரூபாய் என்றும், இதுவரை 110 கோடி ரூபாய் வசூல் செய்யப்பட்டிருப்பதாகவும் மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் விளக்கமளித்துள்ளார். வாடகை மாற்றங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, பல்வேறு கடைகளின் உரிமையாளர்கள் நீதிமன்றத்தை நாடுவதாகவும், இதனாலேயே வாடகை வசூலிப்பதில் சிக்கல் இருப்பதாகவும் கார்த்திகேயன் விளக்கியுள்ளார். வரி வசூல் விவகாரத்தில், அதிகாரிகள் முறைகேட்டில் ஈடுபட்டால், துறை ரிதீயிலான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கார்த்திகேயன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.