இன்று மாநிலம் தழுவிய அளவில் பாஜக போராட்டம் – அண்ணாமலை பங்கேற்பு ..!!

பால் மற்றும் மின் கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி இன்று அனைத்து மாவட்டங்களில் பாஜகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளனர்.

இந்த முறை போராட்டத்தில் அடிமட்ட மக்களும் கலந்து கொள்ளும் வகையில் நடத்த பாஜக திட்டமிட்டுள்ளது.

சென்னையில் 66 இடங்களில் போராட்டம் நடைபெறுகிறது. அடையாறு டெலிபோன் எக்ஸ்சேன்ஞ் முன்பு நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் மாநில செயலாளர் கராத்தே தியாகராஜனும், மடிப்பாக்கத்தில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் துணை தலைவர் கரு.நாகராஜனும் கலந்து கொள்கிறார்கள்.

ஈரோட்டில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கலந்து கொள்கிறார்.

தமிழக அரசின் ‘ஆவின்’ பால் வழங்கும் நிறுவனம், அதன் நிர்வாகச் சீர்கேட்டினால், நஷ்டத்தில் நடத்தப்படுகிறது. தவறான நடைமுறையால் ஏற்படும் வருவாய் இழப்பை மக்கள் தலையில் சுமத்துவதை ஏற்றுக் கொள்ள முடியாது,” என அண்ணாமலை அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.

ஏற்கெனவே வீட்டு வரி உயர்வு, சொத்து, தண்ணீர், கழிவு நீர் வரி ஆகியவற்றுடன் மின் கட்டணத்தையும் பத்திரப் பதிவுக் கட்டணத்தையும் தமிழக அரசு தாறுமாறாக உயர்த்தி உள்ளதாகக் குறிப்பிட்டுள்ள அவர், தற்போது பச்சிளம் குழந்தைகளுக்கு பயன்படும் பாலுக்கான விலையையும் உயர்த்தி இருப்பது, வாக்களித்த தமிழக மக்களை வஞ்சிக்கும் செயல் எனச் சாடி உள்ளார்.

“அத்தியாவசியப் பொருள்களின் விலைகள் எல்லாம் ஏறுமுகமாக உள்ள நிலையில், தமிழக மக்களின் வாழ்வாதாரம் மட்டும் இறங்கு முகத்தில் உள்ளது. பால் விலையை உயர்த்தி, மக்களை துன்பப்படுத்துகிறது திமுக அரசு,” என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.