திருச்சியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளத் துணை முதல்வர் உதயநிதி திருச்சி வந்தார். இதற்காகச் சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி சென்ற உதயநிதிக்கு அங்கு உற்சாக வரவேற்பு நடைபெற்றது. நேற்று மாலை திமுக இளைஞரணி சார்பில் துறையூர் மருத்துவமனை சாலையில் கலைஞர் நூலகம் திறப்பு விழா, துறையூர் பேருந்து நிலையத்தில் கருணாநிதி சிலை திறப்பு விழா நடந்த நிலையில் அதில் துணை முதல்வர் உதயநிதி கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் பேசிய துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், பொதுவாகத் திருச்சி ஏர்போர்ட்டில் இருந்து ஒரு மணி நேரத்தில் துறையூருக்கு வந்து சேர்ந்துவிடலாம். ஆனால், திமுகவினர் கொடுத்த உற்சாக வரவேற்பால் அங்கு வர 3 மணி நேரம் ஆகிவிட்டது. நான் முன்பு எம்எல்ஏவாக இருந்த போதும், அமைச்சராக இருந்த போதும் துறையூருக்கு வந்துள்ளேன். இப்போது முதல் முறையாகத் துணை முதல்வராக இங்கு வந்துள்ளேன். திமுக சார்பில் தமிழ்நாட்டின் எல்லா தொகுதியிலும் கருணாநிதி சிலை நிறுவப்பட்டு வருகிறது. இன்று துறையூரிலும் சிலை நிறுவப்பட்டுள்ளது. கலைஞர் நூலகம் மருத்துவமனை விளையாட்டரங்கம் எனக் கருணாநிதி பெயரில் பல திட்டங்களைக் கொண்டு வருகிறோம். கருணாநிதியின் மக்கள் நலன் கொள்கைகள், லட்சியங்களை இதன் மூலம் மக்களிடம் கொண்டு செல்கிறோம். கரப்பான் பூச்சி பெயரை வைக்க முடியுமா சில நாட்களுக்கு முன்பு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, எல்லா திட்டத்திற்கும் கருணாநிதி பெயரையே வைக்கிறீர்களே வேறு பெயர் வைக்க முடியாதா எனக் கேட்டிருந்தார். நல்ல திட்டங்களுக்குக் கருணாநிதி பெயர் தானே வைக்க முடியும்.. கரப்பான் பூச்சி பெயரையா அரசுத் திட்டங்களுக்கு வைக்க முடியும்? கரப்பான்பூச்சி என்று யாரைச் சொல்கிறேன் என்று உங்களுக்கே தெரியும். எனக்குத் துணை முதல்வர் பதவி கொடுத்தது தொடர்பாகவும் அவர் தொடர்ந்து விமர்சித்து வருகிறார். எனக்குத் தகுதியில்லை என்றும் எதற்காகப் பதவி கொடுத்தீர்கள் எனக் கேட்டு வருகிறார். அவர் சொல்வதை நான் ஒப்புக்கொள்கிறேன். அவருக்கு உள்ள தகுதி நிச்சயம் எனக்கு இல்லை. ஏனெனில் நான் கூவத்தூரில் யார் காலிலும் விழுந்து இந்த இடத்திற்கு வரவில்லை. எனக்கு எவ்வளவு பொறுப்பு இருந்தாலும் நான், எப்போதும் நான் உங்கள் வீட்டுப் பிள்ளையாகக் கருணாநிதி பேரனாகவே இருப்பேன். வெல்லப் போவது உறுதி: அடுத்து தமிழ்நாட்டில் நடைபெறும் 2025 சட்டசபைத் தேர்தலில் திமுக வெல்லப் போவது உறுதி.. தேர்தலுக்கு இன்னும் 15 மாதங்கள் மட்டுமே இருக்கிறது. நாம் இப்போதே நம் தேர்தல் பணிகளை பிரச்சாரத்தைத் தொடங்குகிறோம். லோக்பா தேர்தலில் திமுக கூட்டணிக்கு 100% வெற்றியைக் கொடுத்தார்கள். திராவிட மாடல் ஆட்சிக்குச் சான்றிதழ் தரும் வகையில் 40-க்கு 40ல் வெல்ல வைத்தார்கள். அதேபோல வரும் தேர்தலில் திமுக கூட்டணி 234 தொகுதியிலும் வெற்றி பெற வேண்டும். குறைந்தது 200 தொகுதிகளிலாவது நாம் வெல்ல வேண்டும். 2026ல் திமுக மீண்டும் ஆட்சி அமைப்பதற்கான இன்றே பிரச்சாரத்தைத் தொடங்குவோம் என்று தெரிவித்தார்.
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0