கொழும்பு: இலங்கை பிரதமர் பதவியில் இருந்து விலகுவதற்கு தாம் தயாராக இருப்பதாக மகிந்த ராஜபக்சே சூசகமாக அறிவித்துள்ளார்.
இந்த நிலையில் மகிந்த ராஜபக்சேவின் 2-வது மகன் யோஷித ராஜபக்சே, மனைவியுடன் இலங்கையைவிட்டு வெளிநாடு ஒன்றுக்கு இன்று காலை தப்பி ஓடிவிட்டதாக கொழும்பு செய்திகள் தெரிவிக்கின்றன.
இலங்கையில் பொருளாதார நெருக்கடி அதி உச்சத்தில் இருப்பதால் மக்கள் தொடர் கிளர்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர். கொழும்பு காலிமுகத்திடல் உள்ளிட்ட பல இடங்களில் இரவும் பகலுமாக பொதுமக்கள் அரசுக்கு எதிராக ஒரு மாதத்துக்கும் மேலாக போராட்டம் நடத்தி வருகின்றனர். ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சே, பிரதமர் மகிந்த ராஜபக்சே இருவரும் ராஜினாமா செய்ய வேண்டும்;புதிய அரசாங்கம் அமைக்கப்பட்டு பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கை. இதனையடுத்து இலங்கையில் தற்போது அவசர நிலை அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் தமது பதவியை காப்பாற்றிக் கொண்டு அண்ணன் மகிந்த ராஜபக்சே பதவிக்கு வேட்டு வைக்கும் வகையில் கோத்தபாய ராஜபக்சே காய்களை நகர்த்தினார். இதனால் வேறுவழியே இல்லாமல் பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்சே ராஜினாமா செய்தாக வேண்டிய நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளார்.
இதனிடையே கொழும்பில் இன்று பிரதமர் மகிந்த ராஜபக்சே வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: அரசியல் இலாபங்களுக்காக இலங்கையை நான் அராஜகமாக்க விரும்பவில்லை. நாட்டை சீர்குலைக்க நாங்கள் விரும்பவில்லை. தற்போதைய சவால்களை எதிர்கொண்டு அவற்றை சமாளிப்பதுதான் எமது கொள்கை. இந்த சவால்களில் இருந்து தப்பித்து ஓடும் வழக்கம் எமக்கும் இல்லை. பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் எதிர்க்கட்சிகள் சொந்த அரசியல் லாபங்களை முன்னெடுக்கின்றன. அந்த எதிர்க்கட்சிகளுக்கு தேவையானது அதிகாரம் மட்டுமே.
ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சேவைப் பொறுத்தவரையில் என்ன மாதிரியான முடிவும் எடுக்க முடியும். பொதுநலன் கருதி ஒரு முடிவு எடுக்கப்பட்டால் நான் எந்தத் தியாகத்தையும் செய்யத் தயார். என் மீது பொதுமக்கள் வைத்த நம்பிக்கைதான் என்னை அரசியலுக்கு வர வைத்தது. இவ்வாறு மகிந்த ராஜபக்சே கூறினார்.
இதனிடையே மகிந்த ராஜபக்சேவின் 2-வது மகன் யோஷித ராஜபக்சே தமது மனைவியுடன் இன்று காலை கொழும்பில் இருந்து வெளிநாடு ஒன்றுக்கு தப்பி சென்றுள்ளார். கொழும்பு விமான நிலையத்தில் இருந்து வெளிநாட்டுக்கு ராஜபக்சே மகன் யோஷித தப்பி ஓடிய அதேநேரத்தில் ராஜபக்சே பதவி விலகக் கூடாது என கொழும்பில் அவரது ஆதரவாளர்கள் உக்கிரமான போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் இலங்கையில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது.