நாடாளுமன்ற சிறப்பு கூட்டத் தொடர்- மொத்தம் 8 மசோதாக்கள் தாக்கல்..!

டெல்லி: நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷியின் கூற்றுப்படி, இன்று தொடங்கி 5 நாட்கள் நடைபெறும் நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடரில் மொத்தம் எட்டு மசோதாக்கள் தாக்கல் செய்வதற்காக பட்டியலிடப்பட்டுள்ளன.

வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் மூன்று நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடைபெறும். ஜனவரி மாத இறுதியில் தொடங்கி மார்ச் மாதம் வரை பட்ஜெட் கூட்டத்தொடரும், மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களிலும், குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களிலும் நடைபெறும். ஆனால், இந்த முறை வழக்கத்திற்கு மாறாக செப்டம்பர் 18ஆம் தேதி தொடங்கி 5 நாட்களுக்கு நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர் நடைபெறும் என கடந்த மாதம் மத்திய அரசு அறிவித்தது.

இந்த சிறப்புக் கூட்டத்தொடரின் நோக்கம் என்ன என்பது தொடர்பாகவும், அஜெண்டா என்ன என்பது குறித்தும் எந்தவித தகவலும் தெரிவிக்கப்படாமல் இருந்தது. அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் திடீரென அறிவிக்கப்பட்ட இந்த சிறப்புக் கூட்டத்தொடரால், எதிர்க்கட்சிகள் மற்றும் பொதுமக்களிடையே பல்வேறு குழப்பங்கள், கேள்விகள் எழுந்தன.

நேற்று நடைபெற்ற நாடாளுமன்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில், பட்டியல் சாதி/பட்டியலிடப்பட்ட பழங்குடியினர் (எஸ்சி/எஸ்டி) ஒழுங்கு தொடர்பான மூன்று மசோதாக்கள் இந்த கூட்டத்தொடரில் விவாதிக்கப்படும் அஜெண்டாவில் சேர்க்கப்பட்டுள்ளதாகக் கட்சித் தலைவர்களுக்குத் தெரிவிக்கப்பட்டது. நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடரில் மொத்தம் 8 மசோதாக்கள் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டு நிறைவேற்றப்படும் என நாடாளுமன்ற விவகார அமைச்சர் பிரகலாத் ஜோஷி தெரிவித்துள்ளார்.

முன்பே பட்டியலிடப்பட்ட மசோதாக்களில் தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்கள் நியமனம் தொடர்பான மசோதாக்களும் அடங்கும். கடந்த மழைக்கால கூட்டத்தொடரின் போது ராஜ்யசபாவில் தாக்கல் செய்யப்பட்ட இந்த மசோதா, தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் இரண்டு தேர்தல் ஆணையர்களின் அந்தஸ்தை அமைச்சரவை செயலாளருக்கு இணையாக கொண்டு வர முயல்வதால் இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.

தேர்தல் ஆணையர் நியமன மசோதா, தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்களை நியமிக்க பிரதமர் தலைமையில், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் ஒரு கேபினட் அமைச்சர் உள்ளிட்ட உயர் அதிகாரம் கொண்ட தேர்வுக் குழுவை அமைப்பதை வலியுறுத்துகிறது. இந்த மசோதா உச்ச நீதிமன்ற நீதிபதி இந்த கமிட்டியில் இடம்பெற வேண்டும் என்ற விதியை விலக்குகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன் தேர்தல் ஆணையர் நியமனத்தில் உச்ச நீதிமன்ற நீதிபதி, பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்டோர் இடம் பெறும் குழு அமைக்கப்பட வேண்டும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது குறிப்பிடத்தக்கது.

மகளிர் இட ஒதுக்கீடு குறித்து புதிய சட்டம் இயற்றப்படுவதற்கான அதிகாரபூர்வ தகவல் எதுவும் இல்லை என்றாலும், மக்களவை மற்றும் மாநில சட்டசபைகள் போன்ற தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்றங்களில் பெண்களுக்கான இடஒதுக்கீட்டை உறுதி செய்வதற்கான மசோதா வர இருப்பதாகவும் பாஜக வட்டாரங்கள் உட்பட டெல்லியில் ஒரு கருத்து உள்ளது என்று பி.டி.ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

5 நாள் நடைபெறும் சிறப்பு கூட்டத்தொடரில் மகளிர் இடஒதுக்கீடு மசோதாவைக் கொண்டு வர பல்வேறு தரப்பினரின் கோரிக்கைகள் குறித்து அரசின் நிலைப்பாடு குறித்து கேட்டபோது, “சரியான நேரத்தில் அரசு உரிய முடிவை எடுக்கும்” எனக் கூறியுள்ளார் பிரகலாத் ஜோஷி.

பிரகலாத் ஜோஷி, தற்போதுள்ள கட்டிடத்தின் மைய மண்டபத்தில் ஒரு விழாவிற்குப் பிறகு, அமர்வு புதிய கட்டிடத்திற்கு மாறும் என்று கூறினார். செப்டம்பர் 20 முதல் புதிய கட்டிடத்தில் அரசாங்கத்தின் சட்டமன்ற பணிகள் தொடங்கும். இன்றும் நாளையும் மட்டுமே பழைய நாடாளுமன்றக் கட்டடத்தில் அவை நடவடிக்கைகள் நடைபெறும். மக்களவை மற்றும் ராஜ்யசபா உறுப்பினர்கள் அனைவரும் செவ்வாய்க்கிழமை காலை குழு புகைப்படம் எடுக்க அழைக்கப்பட்டுள்ளனர்.

நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத் தொடரில், ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ மசோதா மற்றும் இந்தியாவை ‘பாரத்’ என மறுபெயரிடுவதற்கான தீர்மானம் ஆகிய இரண்டு பிரச்சனைகள் கையில் எடுக்கப்படும் என தகவல்கள் உலவி வருகின்றன. இந்த விவகாரம் தொடர்பாக பல வாரங்களாகவே எதிர்க்கட்சிகளுக்கும், மத்திய அரசுக்கும் இடையே வாக்குவாதமாக இருந்து வருகிறது.

புதிய கட்டிடத்திற்கு நாடாளுமன்றத்தை மாற்றுவதைக் குறிக்கும் வகையில் பாராளுமன்ற ஊழியர்களின் பல்வேறு துறைகள் புதிய சீருடைகளை அணியத் தயாராக உள்ளன. ஒரு பிரிவினருக்கான மலர் உருவத்துடன் கூடிய புதிய டிரெஸ் கோடு ஏற்கனவே அரசியல் ரீதியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது, இது ஆளும் கட்சியின் தேர்தல் சின்னமான தாமரை மலரை விளம்பரப்படுத்துவதற்கான “மலிவான” தந்திரம் என்று காங்கிரஸ் விமர்சித்துள்ளது.

நாடாளுமன்றப் பயணத்தின் மீதான விவாதத்தைத் தவிர, லோக்சபாவிற்கான மற்ற பட்டியலிடப்பட்ட அலுவல்களில் ‘வழக்கறிஞர்கள் (திருத்தம்) மசோதா, 2023’ மற்றும் ‘பத்திரிகைகள் மற்றும் பருவ இதழ்கள் பதிவு மசோதா, 2023’ ஆகியவை அடங்கும், இது ஏற்கனவே ராஜ்யசபாவில் கடந்த 3 ஆகஸ்ட் 2023 அன்று நிறைவேற்றப்பட்டது.

இவை தவிர, ‘அஞ்சல் அலுவலக மசோதா 2023’, மூத்த குடிமக்கள் நல மசோதா 2023 ஆகியவை லோக்சபாவில் பட்டியலிடப்பட்டுள்ளது என்று அதிகாரப்பூர்வ புல்லட்டின் தெரிவிக்கிறது. இந்த மசோதா முன்னதாக 10 ஆகஸ்ட் 2023 அன்று ராஜ்யசபாவில் அறிமுகப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.