கிறிஸ்மஸ் பண்டிகையையொட்டி கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு பிரார்த்தனை.

கோவை டிசம்பர் 26 இயேசு கிறிஸ்து பிறந்த நாளான டிசம்பர் 25-ஆம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகையாக உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் கொண்டாடி வருகிறார்கள். அன்றைய தினம் புத்தாடை அணிந்து ஆலயங்களுக்கு சென்று சிறப்பு பிரார்த்தனை செய்கின்றனர். அதன்படி கோவையில் உள்ள கிறிஸ்தவ ஆலயங்களில் நேற்று முன்தினம் நள்ளிரவில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. தொடர்ந்து நேற்று காலையிலும் கூட்டு திருப்பலி மற்றும் பிரார்த்தனைகள் நடைபெற்றன. கோவை திருச்சி ரோட்டில் உள்ள சி.எஸ்.ஐ. கிறிஸ்துஅரசர் ஆலயத்தில் பாதிரியார் ராஜேந்திர குமார் தலைமையில் நடைபெற்ற பிரார்த்தனையில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். உப்பிலிபாளையம் சிஎஸ்ஐ இம்மானுவேல் ஆலயத்தில் பாதிரியார் பிரின்ஸ் கால்வின் தலைமையிலும்,100 அடி ரோடு கிறிஸ்து அரசர் ஆலயத்தில் பாதிரியார் கிறிஸ்டோபர் தலைமையிலும், ரத்தினபுரி புனித பீட்டர் ஆலயத்தில் பாதிரியார் விக்டர் பிரேம் குமார் தலைமையிலும் சிறப்பு பிரார்த்தனை நடந்தது.கோவை பெரிய கடை வீதியில் உள்ள புனித மைக்கேல் அதிதூதர் ஆலயத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவு 11:30 மணிக்கு சிறப்பு திருப்பலி நடைபெற்றது. இதில் கோவை மறை மாவட்ட பிஷப் தாமஸ் அக்குவினாஸ் கலந்து கொண்டு சிறப்பு பிரார்த்தனை நடத்தினார்.கோவை நஞ்சப்பா ரோட்டில் உள்ள கிறிஸ்து அரசர் ஆலயத்தில் நேற்று காலை பங்கு குரு ததேயூஸ் அமல் தாஸ் தலைமையில் கூட்டு திருப்பலி நடந்தது .இதேபோல புலியகுளம் புனித அந்தோனியார் ஆலயத்தில் பங்கு குரு அருண், உதவி பங்கு குருக்கள் ஜேக்கப் தாஸ், ஞானப்பிரகாசம் ஆகியோர் தலைமையிலும் ஜோதிபுரம் சகாய மாதா ஆலயத்தில் ஆரோக்கிய ததேயூஸ் அடிகள், பங்கு குரு விக்டர் ஆகியோர் தலைமையிலும், கோவைப்புதூர் குழந்தை ஏசு ஆலயத்தில் ஆல்பர்ட் செல்வ ராஜ்  தலைமையிலும் திருப்பணி நடைபெற்றது. கோவை ராமநாதபுரத்தில் உள்ள உயிர்த்த ஏசு ஆண்டவர் ஆலயத்தில் கோவை மறை மாவட்ட பிஷப் தாமஸ்அக்குவினாஸ் தலைமை யில் பிரார்த்தனை நடந்தது. இதில் பங்கு குரு ஆனந்தராஜ் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர்.அனைத்து ஆலயங்களும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.ஆலயங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.