கோவையில் லாரி மோதி தாய்கண்முன் மகன் பரிதாப சாவு.

கோவை வெள்ளலூர் மகாலிங்கபுரம் ஜீவானந்தம் நகரை சேர்ந்தவர் தட்சிணாமூர்த்தி. இவரது மனைவி சரஸ்வதி. இவர்களது மகன் ரோஹித் கிருஷ்ணன் (8). சரஸ்வதி நேற்று காலை மகன் ரோஹித் கிருஷ்ணனுடன் மொபட்டில் கடைக்கு சென்று கொண்டிருந்தார். போத்தனூர் ரோட்டில் உள்ள வங்கி அருகே சென்றபோது வெள்ளலூரில் இருந்து போத்தனூர் நோக்கி வந்த லாரி திடீரென எதிர்பாராத விதமாக சரஸ்வதி மொபட் மீது மோதியது. இதில் இருவரும் தடுமாறி கீழே விழுந்தனர். அப்போது லாரியின் பின் சக்கரம் சிறுவன் ரோஹித் கிருஷ்ணன் மீது ஏறி இறங்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயம் அடைந்த சரஸ்வதியை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக் காக அருகே உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து கோவை மேற்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து லாரி டிரைவர் பேரூரை சேர்ந்த மகேந்திரன் என்பவரை கைது செய்தனர். தாய் கண் முன் மகன் விபத்தில் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.