ரூ 600 கோடியில் நீலாம்பூர் வரை மேம்பாலம் நீட்டிப்பு பணிக்கான மண் ஆய்வு தொடங்கியது.

கோவை அவிநாசி ரோட்டில் உள்ள மேம்பாலம் முடியும் பகுதியான கோல்டு வின்ஸ் பகுதி யில் இருந்து நீலாம்பூர் வரை 5 கிலோ மீட்டர் தூரத்துக்கு ரூ. 600 கோடியில் மேம்பாலம் நீட்டிக்கப்படும் என கோவைக்கு கடந்த 6 – ந் தேதி வருகை தந்த முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் அறிவித்தார். தொழில்துறையினர் மற்றும் பொதுமக்கள் இந்த அறிவிப்புக்கு வரவேற்பு தெரிவித்தனர். நீலாம்பூர் பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலுக்கு புதிதாக அமைக்கப்பட உள்ள மேம்பாலம் தீர்வாக அமையும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. தற்போது இந்த மேம்பாலம் அமைப்பதற்கான ஆரம்பகட்ட பணிகளை மாநில நெடுஞ்சாலை துறையினர் மேற்கொண்டு வருகிறார்கள். இதைத் தொடர்ந்து மேம்பாலம் கட்டப்படவுள்ள சாலை பகுதியில் மண் ஆய்வு பணி நேற்று தொடங்கியது. இது குறித்து நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் கூறியதாவது:- மண்ணின் தன்மை எவ்வாறு உள்ளது? எத்தனை அடி ஆழத்துக்கு தாங்கு தூண் அமைக்கப்பட வேண்டும்? என்பன உள்ளிட்ட வற்றை அறிவதற்காக மண் ஆய்வு பணி சின்னியம்பாளையம் முதல் நீலாம்பூர் வரை நடைபெறுகிறது .மண் ஆய்வு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் அரசு ஒப்புதலின் அடிப்படையில் மேம்பாலம் அமைக்க டெண்டர் விடும் பணி தொடங்கும் என்று தெரிவித்தனர்.