பெங்களூர்: கர்நாடக முதல்வராக சித்தராமையாவும், துணை முதல்வராக டிகே சிவக்குமாரும் பெங்களூரில் இன்று மதியம் 12.30 மணிக்கு பதவியேற்க உள்ளனர்.
இந்த விழாவில் பங்கேற்கும் தலைவர்கள் மற்றும் விழாவை புறக்கணிக்கும் தலைவர்களின் விபரம் வெளியாகி உள்ளது.
கர்நாடகா சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி 135 தொகுதிகளில் வெற்றி பெற்று அசத்தியது. மாறாக பாஜக 66 இடங்களில் மட்டுமே வென்று ஆட்சியை இழந்தது. ஜேடிஎஸ் கட்சி 19 இடங்களிலும், மற்றவர்கள் 4 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றனர்.
இதையடுத்து முன்னாள் முதல்வரும், எதிர்க்கட்சி தலைவருமான சித்தராமையா முதல்வராகவும், கர்நாடகா மாநில காங்கிரஸ் தலைவர் டிகே சிவக்குமார் துணை முதல்வராகவும் தேர்வு செய்யப்பட்டனர். சித்தராமையா மற்றும் டிகே சிவக்குமார் ஆகியோர் இன்று பெங்களூர் கன்டீரவா மைதானத்தில் மதியம் 12.30 மணிக்கு நடக்கும் விழாவில் பதவியேற்கின்றனர்.
சித்தராமையா முதல்வராகவும், டிகே சிவக்குமார் துணை முதல்வராக பதவி பிரமாணம் எடுத்து கொள்ள உள்ளனர். மேலும் இவர்களுடன் சேர்ந்து அமைச்சர்களும் பதவியேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இவர்கள் அனைவருக்கும் ஆளுநர் தாவர்சந்த் கெலாட் பதவி பிரமாணம் செய்து வைக்கிறார்.
இந்த விழாவில் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, கேசி வேணுகோபால், ரன்தீப் சுர்ஜேவாலா மற்றும் காங்கிரஸ் கட்சியின் ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகேல் உள்பட பல தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.
இந்த பதவியேற்பு விழாவில் பங்கேற்க தமிழக முதல்வர் ஸ்டாலின், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, பீகார் முதல்வர் நிதிஷ் குமார், துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவார், மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு, தேசிய மாநாட்டு கட்சியின் தலைவர் பரூக் அப்துல்லா, சமாஜ்வாடி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவுக்கும் காங்கிரஸ் சார்பில் காங்கிரஸ் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளரா ராஜா ஆகியோருக்கும் காங்கிரஸ் சார்பில் கர்நாடகா முதல்வர் பதவியேற்பு விழாவில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த பதவியேற்பு விழாவில் தமிழ்நாடு முதல்வர் முக ஸ்டாலின், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, சரத் பவார், உத்தவ் தாக்கரே, நிதிஷ் குமார், தேஜஸ்வி யாதவ், பரூக் அப்துல்லா உள்ளிட்டவர்கள் பங்கேற்க உள்ளனர்.
இருப்பினும் கூட மம்தா பானர்ஜி இந்த விழாவில் பங்கேற்காமல் தவிர்க்க உள்ளார். அவருக்கு பதிலாக மேற்கு வங்க அரசு சார்பில் மக்களவை எம்பி ககோலி கோஷ் தஸ்திதார் கலந்து கொள்ள இருக்கிறார். அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் தான் காங்கிரஸ் அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒருங்கிணைக்க முயற்சிக்கிறது. ஆனால் மம்தா பானர்ஜி பிடிகொடுக்காமல் தொடர்ந்து நழுவி வருகிறார்.
அதேபோல் இந்த விழாவில் தெலங்கான முதல்வர் சந்திரசேகரராவ், ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி, ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக், டெல்லி ஆம்ஆத்மி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்டவர்களும் பங்கேற்க மாட்டார்கள் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளன.
மேலும் பதவியேற்பு விழாவுக்கு மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசனும் பங்கேற்கிறார். இவர் காங்கிரஸ் கட்சியுடன் நெருக்கம் காட்டி வரும் நிலையில் இன்று விழாவில் பங்கேற்க பெங்களூர் புறப்பட்டு சென்றுள்ளார்.