அதிக வட்டி கொடுப்பதாக ஆசை காட்டி… ரூ.360 கோடி மொத்தமாக சுருட்டல்- 1500 பேர் ஹிஜாவு மீது புகார்..!!

திக வட்டி கொடுப்பதாக கூறி பொதுமக்களிடம் 360 கோடி வசூல் செய்து மோசடியில் ஈடுபட்ட ஹிஜாவு நிறுவனம் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக அதிக வட்டி தருவதாக கூறி பொதுமக்களிடம் பணத்தை வசூல் செய்து மோசடி செய்யும் நிறுவனங்கள் மீது பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து கைது நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

குறிப்பாக ஆருத்ரா கோல்ட் டிரேடிங் நிறுவனம், இன்டர்நேஷனல் பைனான்சியல் சர்வீஸ், எல்வின் போன்ற நிறுவனங்கள் பொதுமக்களிடம் ஆயிரக்கணக்கான ரூபாய் கோடி ரூபாய் வசூல் செய்து மோசடி செய்த விவகாரத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

அதன் தொடர்ச்சியாக அசோக் நகர் பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில் பாதிக்கப்பட்ட நூற்றுக்கணக்கானோர் கடந்த நவம்பர் 3 ஆம் தேதி முற்றுகையிட்டு புகார் அளித்தனர். இவர்களின் புகாரின் அடிப்படையில், தற்போது ஹிஜாவு என்ற நிறுவனம் மீது வழக்கு பாய்ந்துள்ளது.

ஹிஜாவு என்ற நிறுவனத்தின் தலைவர் சௌந்தர்ராஜன், தங்களிடம் ஒரு லட்சம் ரூபாய் முதலீடு செய்தால், மாதம் 15 ஆயிரம் முதல் 20 ஆயிரம் ரூபாய் வரை வட்டி வழங்குவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

முதலீடாக பெறப்படும் தொகை துபாய் எண்ணெய் கிணற்றிலும், மலேசியாவில் பாமாயில் நிறுவனத்திலும், சிங்கப்பூரில் பல தொழிற்சாலைகளிலும் முதலீடு செய்யப்படுவதாக கூறியுள்ளார். இதை நம்பி ஏராளமானோர் பணம் செலுத்தியுள்ளனர். ஆனால், கூறியபடி, மாத வட்டி வழங்காமல், முதலீட்டுப் பணத்தையும் திருப்பி தராமல் இழுத்தடித்ததால், முதலீட்டாளர்கள் காவல்துறையில் புகார் அளித்தனர்.

இதுவரை ஆயிரத்து 500 பேர் புகார் அளித்துள்ள நிலையில், 360 கோடி ரூபாய் மோசடி செய்திருப்பது தெரியவந்துள்ளது. இது மேலும் அதிகரிக்கும் எனவும், ஒரு லட்சம் பேரிடம் 900 ஆயிரம் கோடி ரூபாய் வரை பெற்றிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இது தொடர்பாக, முகவர் ஒருவரைப் பிடித்து விசாரணை நடத்திவரும் பொருளாதார குற்றப்பிரிவினர், ஹிஜாவு நிறுவனத்தின் தலைவர் சௌந்தர்ராஜன், அவரது மகன் அலெஸ்சாண்டர் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து, அவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

மேலும், இந்நிறுவனத்தில் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் hijaueowdsp@gmail.com என்ற இமெயில் மூலமாக புகார் அளிக்கலாம் என பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர்.