டோக்கியோ: ஜப்பான் முன்னாள் பிரதமர் அபே சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில் திட்டமிட்ட சதி அம்பலமாகி உள்ளது.ஜப்பானில் நீண்ட கால பிரதமராக பதவியில் இருந்த ஷின்சோ அபே கடந்த வாரம் நாரா ரயில் நிலையம் அருகே பிரசாரத்தின் போது சுட்டு கொல்லப்பட்டார்.
அவருடைய இறுதி சடங்கு நேற்று முன்தினம் நடந்தது. முதற்கட்ட விசாரணையில், மத குரு ஒருவருக்கு குறிவைக்கப்பட்டதாகவும், அவர் வராததால் துரதிஷ்டவசமாக அபே கொல்லப்பட்டதாகவும் கொலையாளி யமகாமி கூறியதாக போலீசார் தெரிவித்தனர். இந்நிலையில், திடீர் திருப்பமாக அபே திட்டமிட்டு கொல்லப்பட்டிருப்பது அம்பலமாகி உள்ளது.
அபேவை சுட்ட, யமகாமி தங்கியிருந்த இடத்தில் இருந்து அவன் பயன்படுத்திய துப்பாக்கி போன்ற பல துப்பாக்கிகளை போலீசார் கைப்பற்றி உள்ளனர். விசாரணையில், அபே கொல்லப்படுவதற்கு முன், அந்த துப்பாக்கி எந்தளவுக்கு சக்தி வாய்ந்தது என்பதை அறிந்து கொள்ள யமகாமி சோதித்து பார்த்ததாக கூறி உள்ளான். இதையடுத்து நாராவில் உள்ள ஐக்கிய தேவாலயத்துக்கு சொந்தமான கட்டிடத்தை போலீசார் ஆய்வு செய்த போது அதில் ஏராளமான தோட்டா துளைத்த அடையாளங்கள் இருந்ததை உறுதி செய்தனர். எனவே திட்டமிட்டு பயிற்சி செய்து அபே சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். மேலும், அபே சுட்டுக் கொல்லப்பட்ட இடத்தில் இருந்து 90 மீட்டர் தூரத்தில் உள்ள கட்டிடத்தில் துப்பாக்கி குண்டுகள் துளைத்த அடையாளம், தோட்டா பாகங்களை போலீசார் கண்டுபிடித்தனர்.