ராஜஸ்தானில் கொடுத்த கடனை திருப்பி செலுத்தாததால் சிறுமிகள் முத்திரைத் தாள்களில் விற்கப்படும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்தில் 8-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் கடன் தொடர்பான பிரச்னைகள், சாதிப் பஞ்சாயத்துகளிடம் செல்லும். அவ்வாறு செல்லும் போது, கொடுத்த கடனை திருப்பி தராத குடும்பத்தினரின், 8 முதல் 18 வயதுக்கு உட்பட்ட சிறுமிகளை முத்திரை பத்திரத்தில் கடன் வாங்கியவர்களிடம் விற்க வேண்டுமாம். சிறுமிகளை விற்க ஒப்புக்கொள்ளவில்லை என்றால், தாய்மார்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்படுவார்களாம்.
முத்திரை பத்திரங்களில் விற்கப்படும் சிறுமிகள் மும்பை, டெல்லி, உத்திரபிரதேசம் போன்ற வெளி மாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் அனுப்பப்படுவதாக கூறப்படுகிறது. அந்த வகையில் ஒரு தாய் ரூ.6லட்சத்திற்காக தனது மகளை 3 முறை விற்ற நிலையில், சிறுமி 4 முறை கர்ப்பமானது தெரியவந்துள்ளது.
இது குறித்து பொதுவெளியில் தெரியவர, சம்பவம் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், நடவடிக்கைகள், அலட்சியம் காட்டிய அரசு அதிகாரிகள், அவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பாக 3 வாரங்களுக்குள் பதிலளிக்க ராஜஸ்தான் அரசுக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.