பறிபோனது சிவசேனா கட்சி, வில் அம்பு சின்னம்… சுப்ரீம் கோர்டில் முறையிடுவோம்- உத்தவ் தாக்கரே பேட்டி..!

காராஷ்டிராவில் சிவசேனா இரண்டாக உடைந்த நிலையில், எந்த அணி உண்மையான சிவசேனா என்ற கேள்விக்குறி எழுந்தது.

இது தொடர்பாக இரு தரப்பினரும் தேர்தல் கமிஷனை அணுகினர். தேர்தல் கமிஷன் கட்சியின் சின்னத்தை முடக்கியது. அதோடு மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, உத்தவ் தாக்கரே ஆகியோரது அணியில் எது உண்மையான சிவசேனா என்று தேர்தல் கமிஷன் விசாரணை நடத்தியது. இதில் ஏக்நாத் ஷிண்டே அணிக்கு சிவசேனாவின் பெயர் மற்றும் வில் அம்பு சின்னத்தை நேற்று தேர்தல் கமிஷன் ஒதுக்கி உத்தரவிட்டது. இந்தத் தீர்ப்பு குறித்து சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “தேர்தல் கமிஷனின் முடிவு ஒரு ஜனாநாயகப் படுகொலை. ஜனநாயகத்துக்கு ஆபத்தானது. ஏக்நாத் ஷிண்டே ஒரு துரோகி. துரோகி எப்போதும் துரோகிதான். அவர்கள் சிவசேனாவின் சின்னத்தைத் திருடிக்கொண்டார்கள். இதற்கு மக்கள் தக்க பதிலடி கொடுப்பார்கள்.

நாங்கள் தொடர்ந்து போராடுவோம். நம்பிக்கையை இழக்க மாட்டோம். இந்தத் திருட்டோடு அவர் (ஷிண்டே) மகிழ்ச்சியாக இருக்கட்டும். ஜனநாயகம் செத்துவிட்டதாக பிரதமர் செங்கோட்டையில் அறிவிக்க வேண்டும். சர்வாதிகாரம் தொடங்கிவிட்டதாக அறிவிக்க வேண்டும். உண்மையான வில் அம்பு எங்களிடம்தான் இருக்கிறது. அவர்களிடம் பேப்பர்தான் இருக்கிறது. 16 எம்.எல்.ஏ-க்களின் பதவியைப் பறிக்கக் கோரி சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த மனுமீது இன்னும் முடிவு எடுக்காத நிலையில், தேர்தல் கமிஷன் எடுத்திருக்கும் முடிவு நியாயமற்றது. சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு விசாரணை நடப்பதால் அதுவரை காத்திருக்கும்படி தேர்தல் கமிஷனிடம் கேட்டுக்கொண்டோம். ஆனால், அதற்கு முன்பே தீர்ப்பு வழங்கியிருப்பது துரதிஷ்டவசமானது.

எதிர்காலத்தில் யாரும் எம்.எல்.ஏ., எம்.பி-க்களை விலைக்கு வாங்கி முதல்வராகவோ அல்லது பிரதமராகவோ வர முடியும். தேர்தல் கமிஷன் முடிவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்வோம்” என்று தெரிவித்தார். தேர்தல் கமிஷன் தனது 78 பக்க தீர்ப்பில், ஏக்நாத் ஷிண்டே 2019-ம் ஆண்டு நடந்த தேர்தலில் வெற்றிபெற்ற 76 சதவிகிதம் பேரின் துணையோடு முதல்வராகியிருக்கிறார் என்று குறிப்பிட்டிருக்கிறது. இது குறித்து முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, “எங்களது அணியை உண்மையான சிவசேனாவாக அறிவித்திருப்பது உண்மைக்கும் மக்களுக்கும் கிடைத்த வெற்றி. ஜனநாயகத்தில் நம்பர்கள்தான் முக்கியம். அது எங்களிடம் இருக்கிறது” என்று தெரிவித்திருக்கிறார். பால் தாக்கரே கட்சியைத் தொடங்கிய நாளிலிருந்து இதுவரை கட்சியில் எத்தனையோ பிரிவுகள் வந்திருக்கின்றன. ஆனால் ஒருபோதும் கட்சி கைவிட்டுப்போகும் அளவுக்கு வந்ததில்லை. இப்போது ஒட்டுமொத்தக் கட்சியும் பால் தாக்கரேவின் குடும்பத்தைவிட்டுச் சென்றிருக்கிறது.

2019-ம் ஆண்டு தேர்தலில் சிவசேனாவும், பா.ஜ.க-வும் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டன. ஆனால், இதில் பா.ஜ.க அதிக தொகுதிகளில் வெற்றிபெற்றது. சிவசேனா 56 தொகுதிகளில் மட்டுமே வென்றது. அப்படியிருந்தும் தங்களுக்கு முதல்வர் பதவி கொடுக்க வேண்டும் என்று உத்தவ் தாக்கரே பிடிவாதமாக இருந்தார். இதில் இரு கட்சிகளிடையே கருத்து வேறுபாடு அதிகரித்தது. தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அஜித் பவாரோடு சேர்ந்து தேவேந்திர பட்னாவிஸ் திடீரென ஆட்சியமைத்தார். ஆனால் அது சில நாள்களே நீடித்தது. அதன் பிறகு உத்தவ் தாக்கரே காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுடன் இணைந்து ஆட்சியமைத்தார். அதற்குப் பழிவாங்கவே சிவசேனாவை இரண்டாக உடைத்ததாக பட்னாவிஸ் ஏற்கேனவே தெரிவித்திருந்தார். இப்போது கட்சியையே உத்தவ் தாக்கரேவிடமிருந்து பிடுங்கி ஏக்நாத் ஷிண்டேயிடம் கொடுத்திருப்பதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.