கோவை பீடா கடையில் கஞ்சா சாக்லெட் விற்பனை- வடமாநில வாலிபர் கைது..!

கோவை மாவட்டத்தில் குட்கா மற்றும் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் தனிப்படை அமைத்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் கோவை மலுமிச்சம்பட்டி அருகே உள்ள பீடா கடையில் கஞ்சா விற்பனை நடப்பதாக போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவல் அடிப்படையில் செட்டிபாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையிலான போலீீசார் அங்குச் சென்று பீடா கடையில் சோதனை நடத்தினர். அப்போது பீடா கடையில் சாக்லெட் பாக்கெட்டுகள் இருந்தது தெரியவந்தது. அதனை சோதனை செய்த போது அது கஞ்சா சாக்லெட்டுகள் என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீீசார் பீடாக்கடையில் இருந்தவரை பிடித்து விசாரணை நடத்தினர். அதில் அவர் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த ஷஹாதிப் ராய் (வயது 25) என்பதும், தற்போது கோவை சூலூர் தென்னம்பாளையம் பகுதியில் நண்பர்களோடு தங்கிக் கொண்டு, மலுமிச்சம்பட்டி பகுதியில் பீடா கடை நடத்தி வந்ததும், அதனுடன் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் கடையில் இருந்த ஒரு கிலோ 100 கிராம் மதிப்பிலான 195 கஞ்சா சாக்லெட்டுகளை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து செட்டிபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து ஷஹாதிப் ராவை கைது செய்தனர். பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.