காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவராகக் கருதப்பட்ட குலாம் நபி ஆசாத், கடந்த சில நாள்களுக்கு முன்பு காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்து ஐந்து பக்கக் கடிதத்தையும் வெளியிட்டார்.
ஏற்கெனவே கட்சி தலைமைமீது அதிருப்தியில் இருந்த குலாம் நபி ஆசாத், காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகியது கட்சிக்குப் பெருத்த பின்னடைவாகக் கருதப்பட்டது. தொடர்ச்சியாகத் தோல்வியைச் சந்தித்துவரும் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகிய பிறகு முதன்முறையாக குலாம் நபி ஆசாத் அளித்துள்ள பேட்டியில், “எனது ராஜினாமா கடிதத்தில் எனது மனதில் உள்ளதை ஐந்து சதவிகிதம் மட்டுமே எழுதியிருக்கிறேன். ராஜினாமா கடிதத்தை எழுத மூன்று நாள்கள் எடுத்துக்கொண்டேன். அப்படி எழுதியபோதும், எழுதிய பிறகும் எனக்குத் தூக்கம் வரவில்லை. கட்சித் தலைமைக்கு எனது கருத்துகளைச் சொல்கிறேன். கடிதம் அனுப்புகிறேன். எந்தவித பதிலும் இல்லை. எத்தனை நாளைக்குத்தான் அவமானப்படுத்துவதை பொறுத்துக்கொள்வது?
காங்கிரஸ் கட்சி இப்போது துதிபாடுபவர்களின் கூட்டமாகவும், ராகுல் காந்திக்கு நெருக்கமானவர்களின் கூட்டமாகவும் இருக்கிறது. ராகுல் காந்தி எப்போதும் இளம் தலைவர்கள் வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்.
அப்படியென்றால் வயதானவர்களால் பயனில்லை என்று அர்த்தமா… மகாத்மா காந்தி எத்தனையாவது வயதில் நாட்டுக்குச் சுதந்திரம் வாங்கிக்கொடுத்தார்… ஜனதா கட்சியைத் தோற்கடித்தபோது இந்திரா காந்திக்கு என்ன வயது… 30 அல்லது 40 வயதுடையவர்களைக் கொண்டு கட்சியை நடத்த முடியாது. ராகுல் காந்தி கட்சியை நடத்தும் அணுகுமுறை மூலம் ஒரு தேர்தலில்கூட வெற்றிபெற்றது கிடையாது. 2013-லிருந்து ராகுல் காந்தி அனைத்து முடிவுகளையும் எடுக்கிறார். நாங்கள் பஸ்களிலும், லாரிகளிலும் பயணம் செய்து காயமடைகிறோம். ஆனால் நீங்கள் ட்விட்டரில் கட்சியை நடத்திக்கொண்டிருக்கிறீர்கள். ட்விட்டரில் கட்சியை நடத்த முடியாது.
அடுத்த 40 ஆண்டுகளுக்கு அவர்களால் பெரிதாக எதையும் செய்ய முடியாது. என்னையோ அல்லது என்னைப் போன்றவர்களையோ பயன்படுத்திக் கொண்டார்களா… நாங்கள் எழுதிய கடிதம் குறித்து விவாதிக்க காங்கிரஸ் காரிய கமிட்டி கூடியபோது எங்களைத் திட்டத்தான் செய்தார்கள். என்னை `துரோகி’ என்றும், `முதுகில் குத்தியவன்’ என்றும் சொன்னார்கள். ராகுல் காந்தி முந்திக்கொண்டு நான் பாஜக-வின் வார்த்தைகளைப் பேசுவதாகச் சொன்னார். எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோதுகூட நான் மட்டுமே நரேந்திர மோடியிடம் பேசவில்லை. அவரைத் தனிப்பட்ட முறையில் சென்று சந்தித்தது கிடையாது. அவரைத் தழுவிக்கொண்டது கிடையாது. ராகுல் காந்தி நாடகமாடுகிறார். எனக்காக பிரதமர் இரக்கப்பட்டதாகச் சொன்னார்கள்.
நான் சிறந்த நாடாளுமன்ற உறுப்பினர் என்ற விருதைப் பெற்றபோதுகூட கட்சித் தலைவர் அதற்கான விழாவில் கலந்துகொள்ளவில்லை. விரைவில் காஷ்மீரில் கட்சி தொடங்கவிருக்கிறேன். அந்தக் கட்சியை தேசிய அளவில் கொண்டு செல்வேன். காங்கிரஸ் கட்சியிலிருந்து இன்னும் பலர் வெளியேறுவார்கள். சுயமரியாதை இருப்பவர்கள் காங்கிரஸ் கட்சியைவிட்டு வெளியேற வேண்டும்” என்று தெரிவித்தார்.
குலாம் நபி ஆசாத் விரைவில் காஷ்மீரில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருக்கிறார். பாஜக-வில் சேரும் திட்டம் எதுவும் இல்லை என்று திட்டவட்டமாக குலாம் நபி ஆசாத் தெரிவித்தார். ஏற்கெனவே மேற்கு வங்கம், வடகிழக்கு மாநிலங்கள், ஆந்திரா, மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி முக்கியத் தலைவர்களை இழுந்துவிட்ட நிலையில் இப்போது காஷ்மீரிலும் தனது பிடியை காங்கிரஸ் இழந்திருக்கிறது.