கோவை அருகே டாரஸ் லாரியில் கேரளாவுக்கு கடத்திய 440 மூட்டை ரேஷன் அரிசி பறிமுதல். டிரைவர் கைது

கோவை;  தமிழ்நாடு குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுதுறை கோவை மண்டல போலீஸ் சூப்பிரண்டு சந்திரசேகரன் மேற்பார்வையில் துணை கண்காணிப்பாளர் ஜனனி பிரியா ,உதவி ஆய்வாளர் பிரபு மற்றும் போலீசார் அத்தியாவசிய பண்டங்கள் கடத்தல் மற்றும் பதுக்கல் சம்பந்தமான குற்றங்களை தடுக்கும் பொருட்டு நேற்று ரோந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது சேலம் – கொச்சின் ரோட்டில் செல்லும் டாரஸ் லாரியில் ரேசன் அரிசியை கேரளாவிற்கு கடத்தி செல்வதாக ரகசிய தகவலில் டோல்கேட் அருகே லோடுடன் வந்த டாரஸ் லாரியை நிறுத்தியபோது அது நிறுத்தாமல் சென்றது. லாரியை போலீசார்துரத்திச் சென்று சுற்றி வளைத்து மடக்கி பிடித்தனர்.லாரியில் இருந்த மூட்டைகளை சோதனை செய்து பார்த்த போது 440 மூட்டைகளில் தமிழ்நாடு அரசால் பொது விநியோக திட்டத்தின் கீழ் மக்களுக்கு இலவசமாக வழங்கபடும் ரேசன் அரிசி என தெரிய வந்தது. ஓட்டுனரை விசாரித்தபோது அவரது பெயர் மணி (41) பொள்ளாச்சி என தெரியவந்தது.மேலும் மேற்படி அரிசி மூட்டைகளை ஆந்திராவிலிருந்து கேரளாவிற்கு கடத்தி சென்று விற்பதாக கூறினார். அரிசி மூட்டைகள் மொத்தம் 20 டன் கொண்டது. இதன் மதிப்பு ரூ. 5லட்சம் இருக்கும் கேரளாவிற்கு கடத்தி செல்ல இருந்த 20 டன் ரேசன் அரிசி லாரியை மடக்கி பிடித்த கோவை சரகம் காவல் துறை துணை கண்காணிப்பாளர் ஜனனி பிரியா,சப் இன்ஸ்பெக்டர் பிரபு மற்றும் போலீசாரை குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுதுறை காவல் துறை தலைவர் மற்றும் மண்டலகாவல் கண்காணிப்பாளர் சந்திரசேகரன் ஆகியோர் வெகுவாக பாராட்டினார்கள். மேலும் இவ்வழக்கில் தொடர்புடைய 4 குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கபட்டுள்ளது.