சிறுவர்களை குற்ற செயல்களில் ஈடுபடாமல் தடுப்பதற்ககாக உருவாக்கபட்ட திட்டமே சிற்பி- முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு..!

பொறுப்புமிக்க மாணவர்களை உருவாக்கும் திட்டமே சிற்பி என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னையில் அதிகரித்து வரும் சிறார்களுக்கான குற்றச்செயல்களை தடுக்கவும், அதற்கு தீர்வு காணவும் சிற்பி திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை கலைவாணர் அரங்கத்தில் தொடங்கி வைத்தார்.

பின்னர் நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மிகவும் பொறுப்புமிக்க நிகழ்ச்சி இது. காவல்துறை மக்களின் நண்பன் என்று சொல்லும் வேளையில், மக்களும் காவல்துறையின் நண்பனாக இருக்க வேண்டும் என்பதே என் எண்ணம். காவல்துறையும், மக்களும் இணைந்து செயல்பட்டால் குற்றங்களே இருக்காது என்றார்.

காவல்துறைக்கும், மக்களுக்கும் பாலமாக சிற்பி திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. பொறுப்புமிக்க மாணவர்களை உருவாக்கும் திட்டமே சிற்பி. ரூ.4.25 கோடி செலவில் சிற்பி திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. சிறுவர்களை பொது ஒழுக்கம், சமூகப்பொறுப்பு உடையவர்களாக உருவாக்கும் முயற்சியே இத்திட்டத்தின் நோக்கம் என்று தெரிவித்தார்.

சிறார்கள் குற்றச்செயல்களில் ஈடுபடுவதற்கு குடும்ப உறுப்பினர்களின் கவனக்குறைவு தான் காரணம். சிறார் குற்றச்செயல்களை தடுக்க காவல்துறை செயல்பட்டு வருகிறது. வளர்ச்சி ஒருபக்கம் இருந்தாலும், சமூகப்பிரச்சனைகளும் அதிகமாகி வருகின்றன. போதைப்பொருள் நடமாட்டத்தைக் கண்காணித்து, அதை ஒழிக்கும் நடவடிக்கைகள், போக்குவரத்து விதிகளை கடைபிடித்தல் உள்ளிட்ட பண்புகளை சிறார்களிடத்தில் ஏற்படுத்த வேண்டும். சிற்பி போல் மாணவர்களை செதுக்கிட வேண்டும் என்றார்.

சிற்பி திட்டத்துக்காக 8-ம் வகுப்பு பயிலும் 2,764 மாணவர்களும், 2,634 மாணவிகளும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். சிற்பி திட்ட மாணவர்களுக்கு பயிற்சி, ஊட்டச்சத்து உணவு உள்ளிட்டவற்றுடன் நிர்ணயிக்கப்பட்ட 8 இடங்களுக்கு கல்விச் சுற்றுலாவும் அழைத்துச் செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், பயிற்சிக் காலத்தில் மனித உரிமை மீறல் இருக்கக் கூடாது. எவ்வித புகாருக்கும் இடமின்றி சிற்பி திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று கூறினார்.