பினாமி பெயரில் சசிகலா வாங்கிய ரூ. 15 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் வருமான வரித்துறையால் முடக்கப்பட்டுள்ளது.
2017-ம் ஆண்டு சசிகலா மற்றும் அவரின் உறவினர் தொடர்பான 127 இடங்களில் வருமானவ வரித்துறையினர் சோதனை நடத்தினர்.இந்த சோதனையின் தொடர்ச்சியாக சசிகலாவுக்கு சொந்தமான சொத்துக்களை வருமான வரித்துறையினர் முடக்கி வருகின்றனர். பினாமி சட்டத்தின் கீழ் இந்த நடவடிக்கையை வருமான வரித்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி இதுவரை சசிகலாவுக்கு சொந்தமான சொத்துக்கள், வருமான வரித்துறையினரால் 3 கட்டமாக முடக்கப்பட்டுள்ளன.
அந்த வகையில், முதல் கட்டமாக சென்னை, கோவை, புதுவையில் இருந்த 9 சொத்துக்களை வருமான வரித்துறை அதிகாரிகள் முடக்கினர். 2-வது கட்டமாக போயஸ் தோட்டம், தாம்பரம், ஸ்ரீபெரும்புதூர் ஆகிய இடங்களில் இருந்த சொத்துக்கள் முடக்கப்பட்டது.. 3-வது கட்டமாக கோடநாடு எஸ்டேட் தொடர்பான சொத்துக்கள் முடக்கப்பட்டது.. பையனூரில் உள்ள ஒரு பங்களாவுக்கு சீல் வைக்கப்பட்டது.
இந்நிலையில் சென்னை தி.நகர் பத்மநாபா தெருவில் உள்ள ஆஞ்சநேயா பிரிண்டர்ஸ் நிறுவன சொத்துக்களை வருமான வரித்துறை முடக்கி உள்ளது. பினாமி பெயரில் சசிகலா வாங்கிய ரூ.15 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் தற்போது முடக்கப்பட்டுள்ளன. சசிகலா பினாமி பெயரில் சொத்து வாங்கியதை உச்சநீதிமன்றம் உறுதி செய்ததை அடுத்து இந்த சொத்துக்கள் முடக்கபப்ட்டுள்ளன.