புதுடெல்லி: சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக அதிகரித்துள்ள நிலையில், இந்திய எண்ணெய் நிறுவனங்கள் ரஷ்யாவிடமிருந்து சலுகை விலையில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதற்கான முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளன.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதலுக்கு எதிர்வினையாக ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதற்கு அமெரிக்கா தடை விதித்தது. அதையடுத்து, பல ஐரோப்பிய நாடுகளும் ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை நிறுத்தின. இதனால், ரஷ்யாவுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டது. விளைவாக, கச்சா எண்ணெயை சலுகை விலையில் வழங்குவதாக ரஷ்யா அறிவித்தது.
இந்த வாய்ப்பை இந்தியா பயன்படுத்தி வருகிறது. கடந்த வாரம்இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் ரஷ்ய நிறுவனத்திடமிருந்து 30 லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெய் வாங்க ஒப்பந்தம் மேற்கொண்டது. அதையடுத்து இந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனமும் ரஷ்ய எண்ணெய் நிறுவனத்திடமிருந்து 20 லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெய் வாங்க ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
மேலும், சில இந்திய நிறுவனங்கள் ரஷ்ய நிறுவனங்களிடமிருந்து சலுகை விலையில் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியா அதன் எண்ணெய் தேவையில் 80% இறக்குமதி செய்கிறது. இதில் 2% அளவிலே ரஷ்யாவிடமிருந்து இறக்குமதி செய்து வந்தது. கடந்த ஆண்டு மார்ச் மாதத்துடன் ஒப்பிடுகையில் தற்போது ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி 4 மடங்கு அதிகரித்துள்ளது.