ரஷ்ய அதிபராக விளாடிமிர் புதின் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 5வது முறையாக அதிபராக பதவியேற்றதன் மூலம், ஜோசப் ஸ்டாலினுக்குப் பிறகு அதிக காலம் பதவி வகித்த ரஷ்யத் தலைவர் என்ற பெருமையை புடின் பெற்றுள்ளார். ரஷ்ய அதிபர் தேர்தல் வெள்ளிக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை நடைபெற்றது. இந்த மூன்று நாட்களில், 87 சதவீத வாக்குகள் பெற்ற புடின் பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெற்றார். இதை தொடர்ந்து நேற்று நாட்டு மக்களிடம் உரையாற்றிய புடின் ரஷ்ய ஜனநாயகத்தை பாராட்டினார். மேலும் ரஷ்யாவில் உள்ள ஜனநாயகம் மேற்கு நாடுகளை விட மிகவும் வெளிப்படையானது என்றும் கூறினார். தொடர்ந்து பேசிய அவர் உக்ரைன் தொடர்பான பணிகளைத் தீர்ப்பதற்கு ரஷ்ய ராணுவம் பலப்படுத்தப்படும். நமக்கு முன்னால் பல பணிகள் உள்ளன. ஆனால் நாம் நமது பணியை செய்யும் போது, யார் நம்மை மிரட்டி, அடக்க நினைத்தாலும் சரி அவர்கள் யாரும் வரலாற்றில் வெற்றி பெற்றதில்லை, இப்போதும் வெற்றி பெறமாட்டார்கள், எதிர்காலத்திலும் வெற்றி பெற மாட்டார்கள்” என்று தெரிவித்தார். முன்னதாக புடின் மேடையில் தோன்றியபோது, அவரது ஆதரவாளர்கள் “புடின், புடின், புடின்” மற்றும் “ரஷ்யா, ரஷ்யா, ரஷ்யா” என்று கோஷமிட்டனர். இந்த வெற்றியின் மூலம், சோவியத் காலத்தில் ஜோசப் ஸ்டாலினுக்குப் பிறகு அதிக காலம் பதவி வகித்த ரஷ்யத் தலைவர் என்ற பெருமையையும் புடின் பெற்றார். சோவியத் ஒன்றியத்தின் தலைவராக 1924 முதல் 1953 வரை (29 ஆண்டுகள்) ஸ்டாலின் பணியாற்றினார். விளாடிமிர் புடின் 24 ஆண்டுகளாக பதவியில் இருந்து வருகிறார், மேலும் அவரது ஐந்தாவது பதவிக்காலத்துடன், அவர் 2030 வரை பதவியில் இருப்பார், இதன் மூலம் அவரின் பதவிக்காலம் 30 ஆண்டுகள் ஆகும். இந்த தேர்தல் புடின் 87 சதவீத வாக்குகளைப் பெற்றிருந்தாலும், கம்யூனிஸ்ட் வேட்பாளர் நிகோலாய் கரிடோனோவ் 4 சதவீதத்திற்கும் குறைவான வாக்குகளைப் பெற்று இரண்டாவது இடத்தைப் பிடித்தார். புதுமுக வீரர் விளாடிஸ்லாவ் டாவன்கோவ் மூன்றாவது இடத்தையும், தீவிர தேசியவாதி லியோனிட் ஸ்லட்ஸ்கி 4-வது இடத்தையும் பிடித்தனர். 2018ல் 67.5 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன. இருப்பினும், 2024 தேர்தலில் 74.22 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. பெரும் வாக்கு வித்தியாசத்தில் புடின் வெற்றி பெற்றாலும், ரஷ்யாவின் தேர்தல்கள் சட்டவிரோதமானது என்றும் போலியானது என்றும் விமர்சனம் எழுந்துள்ளது. அமெரிக்கா, ஜெர்மனி, இங்கிலாந்து மற்றும் பிற நாடுகள் அரசியல் எதிரிகளை சிறையில் அடைத்ததாலும், தணிக்கை செய்யப்பட்டதாலும் வாக்களிப்பு சுதந்திரமாகவோ அல்லது நியாயமானதாகவோ இல்லை என்று விமர்சித்துள்ளன. எதிர்க்கட்சி தலைவரும் நன்கு அறியப்பட்ட விமர்சகர் அலெக்ஸி நவல்னி, புடினை தோற்கடிக்கக்கூடிய ஒரே வேட்பாளராகருதப்பட்டார். ஆனால் கடந்த மாதம் ஆர்க்டிக் சிறையில் மர்மமான சூழ்நிலையில் இறந்து கிடந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0