மாஸ்கோ: உக்ரைன் நாட்டின் மீது உக்கிரமான படையெடுப்பை நிகழ்த்தி வருகிறது ரஷ்யா. ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு நடவடிக்கையானது மூன்றாவது உலக யுத்தத்தை மூளச் செய்யுமா? என்கிற பேரச்சமும் எழுந்துள்ளது.
ரஷ்ய பிராந்தியத்தில் உள்ள பல நாடுகளில் அமெரிக்கா தலைமையிலான நேட்டோ எனப்படும் கூட்டமைப்பின் படைகள் குவிக்கப்பட்டுள்ளன. இதனை ரஷ்யா தொடக்கம் முதல் எதிர்த்து வருகிறது.
அண்டை நாடான உக்ரைனும் நேட்டோவில் இணைவதில் படுமும்முரமாக இருக்கிறது. இந்த நிலையில் ரஷ்ய மொழி உக்ரைன் பிரிவினைவாதிகளுக்கு ஆதரவு என்ற காரணத்தை முன்வைத்து உக்ரைன் மீது மிகப் பெரும் யுத்தத்தை கட்டவிழ்த்துவிட்டிருக்கிறது ரஷ்யா.
தற்போதைய நிலையில் உக்ரைனின் நேட்டோ சார்பு அரசாங்கம் அல்லது உக்ரைன் தேசியவாத தலைமையின் அதிகாரம் முடிவுக்கு வருவதுதான் ரஷ்யாவின் படையெடுப்பைத் தடுக்கக் கூடியதாக இருக்கும். இத்தகைய மாற்றத்தை யுத்தமின்றி ரஷ்யாவால் செய்திருக்க முடியும். ஆனால் நேட்டோ படைகளுக்கு அதாவது அமெரிக்காவுக்கும் அதன் கூட்டாளிகளுக்கும் தம் வல்லமையை காட்ட உக்ரைனை பலி எடுத்து கொண்டிருக்கிறது ரஷ்யா. உக்ரைனைப் பாதுகாக்க, ரஷ்யாவை சூழ்ந்து நிற்கும் நேட்டோ படைகள் போர்க்களத்தில் இறங்கினால் மூன்றாவது உலக மகா யுத்தம் தொடங்கிவிடும் என்பதுதான் தற்போதைய நிலை.
முதலாவது உலகப் போர் 1914 முதல் 1918 வரை நடைபெற்றது. உலக அரசியலில் ஆகப் பெரும் மாற்றங்களுக்கு வித்திட்டது இந்த உலகப் போர். ஆஸ்திரியாவின் இளவரசர் சுட்டுக் கொல்லப்பட்டதில் தொடங்கியது முதலாவது உலகப் போர். உலகம் அப்போது நேச நாடுகள், மைய நாடுகள், நடுநிலை நாடுகளாக பிரிந்து நின்று யுத்தம் நிகழ்த்தின. பேரழிவைத் தந்த முதலாவது யுத்தத்தின் முடிவின் கம்யூனிச நாடுகள் உதயமாகின. குடியரசு நாடுகள் முகிழ்த்தன. சர்வ வல்லமை பொருந்திய மன்னராட்சி சாம்ராஜ்ஜியங்கள் உலக வரைபடத்தில் இருந்தே காணாமல் போகின.
அதேபோல் அடுத்த 20 ஆண்டுகளில் 1939 முதல் 1945 வரை 2-வது உலகப் போர் நடைபெற்றது. அப்போது உலகம் அச்சு நாடுகள், நேச நாடுகள் என பிரிந்து நின்று மோதின. இன்றைக்கு உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்ததைப் போல அன்று போலந்து மீது ஜெர்மன் படையெடுத்ததால் 2-வது உலக யுத்தம் நடைபெற்றது. மனிதகுலம் கண்டிராத பேரழிவுகளை 2-வது உலக யுத்தம் தந்தது. இன்றைக்கும் ஜப்பானில் பேரழிவின் பெருஞ்சாட்சியமாக அமெரிக்காவின் அணுகுண்டு வீச்சால் அழிந்த ஹிரோஷிமா நகரம் இருக்கிறது. 2-வது உலக யுத்தத்தின் முடிவில் நாசிசம், பாசிசம் எனும் நச்சரவங்கள் நசுக்கப்பட்டன. 2-வது உலக யுத்தத்துக்குப் பின்னர் இந்தியா உள்ளிட்ட நாடுகள் விடுதலை பெற்றன.
இப்போது 2-வது உலக யுத்தம் தொடங்கிய அதே போலந்து பிராந்தியத்தில்தான் ரஷ்யா, உக்ரைன் மீது படையெடுப்பை தொடங்கி உள்ளது. அமெரிக்கா தலைமையிலான நேட்டோ நாடுகள்; அமெரிக்காவை எதிர்க்கும் நாடுகள் என பிரிந்து கொண்டிருக்கிறது சர்வதேசம். நேட்டோவின் ராணுவம் உக்ரைனை பாதுகாக்க இறங்கிவிட்டால் 3-வது உலக யுத்தம் தொடங்கிவிடும் என்கின்றனர் சர்வதேச அரசியல் பார்வையாளர்கள்.